முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் கல்லூரிகளின் கோரிக்கை நிராகரிப்பு: என்ஜினியரிங் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினியரிங் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து என்ஜினியரிங் கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்குகிறது.

ஐகோர்ட்டில் மனு

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் முகம்மது ஜலீல். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு தொழில் கல்விகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2006-ன் படி சிறுபான்மை அல்லாத சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இந்த இடங்களில் ஒற்றை சாளர முறையின்படி நிரப்பப்படுகிறது.

காலியாக ...

2007-ம் ஆண்டு மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 784 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 94 ஆயிரத்து 346 இடங்களும், 2008-ம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 680 இடங்களில், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 565 இடங்களும், 2009-ம் ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 790 இடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டன.ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது மிகவும் குறைந்து விட்டது.  அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2014-ம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் இடங்களும், 2015-ம் ஆண்டு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 83 இடங்களும், 2016-ம் ஆண்டு ஒரு லட்சத்து 18 ஆயிரம் இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டன.

22 கல்லூரிகள் மூட ...

சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்கள் பெரும் பகுதி இடங்களை அரசிடம் கலந்தாய்வுக்காக ஒப்படைக்கின்றன. ஆனால் கலந்தாய்வு முடிந்து நிரப்பப்படாத இடங்கள் கடைசி நேரத்தில் அந்த கல்லூரிகளுக்கு திருப்பி ஒப்படைக்கப்படுவதால், அவற்றை கல்லூரி நிர்வாகத்தாலும் நிரப்ப முடிவதில்லை. இதனால் தனியார் சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை. வருவாய் குறைவதால், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்தாண்டு மட்டும் 22 என்ஜினியரிங் கல்லூரிகள் மூட விண்ணப்பித்துள்ளன.

தடை விதிக்க ...

நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவுள்ள கலந்தாய்வில் சுமார் 60 சதவீத இடங்கள், அதாவது ஒரு லட்சத்துக்கும் மேலான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள், தங்களது கல்லூரிகளில் உள்ள இடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அல்லது சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களின், அரசுக்கு வழங்கும் இடங்களின் சதவீதத்தை மாற்றியமைக்க வேண்டும். இதுகுறித்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு கடந்த 7-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என்ஜினியரிங் படிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் வரும் 27-ந் தேதி நடத்தும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். என் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோரிக்கை நிராகரிப்பு

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, கலந்தாய்வு இல்லாமல் அரசு ஒதுக்கீட்டு இடத்தை கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளேன்’ என்றார். அதற்கு நீதிபதி, என்ஜினியரிங் படிப்புக்கு கலந்தாய்வு கண்டிப்பாக நடத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்கவும் முடியாது’ என்றார். அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, ‘ஏற்கனவே அரசுக்கு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீத இடங்களை வழங்குவதை கல்லூரி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டது. தற்போது அந்த இடங்களை எல்லாம் திருப்பிக் கேட்க முடியாது’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாததத்தையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.


கலந்தாய்வு 17-ல் தொடக்கம்

இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜூலை 17-ம் தேதியிலிருந்து என்ஜினியரிங் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும். இந்தக் கலந்தாய்வு இணையம் மூலமாக நடத்தப்படும். இக் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 19, 20 ஆகிய நாட்களில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும். இந்த கல்வியாண்டில் என்ஜினியரிங் படிப்பில் சேர 1.47 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து