60 மீனவர்கள் மற்றும் 146 படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் - பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி மீண்டும் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      தமிழகம்
cm palanisamy(N)

சென்னை : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 60 பேர் மற்றும் பிடித்துவைக்கப்பட்டிருக்கும் 146 படகுகளை உடனடியாக விடுவிக்க  நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி நேற்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

7 மீனவர்கள் கைது

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:-


ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மண்டபத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பாக் ஜலசந்தி கடல்பகுதியில் 7 மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு வலைகளை உலர்த்திக் கொண்டியிருந்தனர். அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் பல படகுகளில் வந்து அந்த 7 மீனவர்களையும் துன்புறுத்தி அடித்ததோடு அவர்களை பிடித்துக்கொண்டு காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துகொண்டு சென்றுள்ளனர். இது தொடர்கதையாக இருக்கிறது.

விடுவிக்க நடவடிக்கை ...

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு ஏற்கனவே இலங்கை சிறையில் இருக்கும் 53 பேர்களையும் கடந்த 12-ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 7 பேர்களையும் சேர்த்து 60 மீனவர்களையும் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 144 படகுகளையும் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளையும் சேர்த்து 146 படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரியமாக பாக் ஜலந்தி கடல் பகுதியில் மீன்படிக்கும் தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாத்து தரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்தக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து