விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்: தாது மணல் குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை - முதல்வர் எடப்பாடி தகவல்

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      தமிழகம்
cm edapadi assembly 2017 7 13

சென்னை : தாது மணல் குறித்த வழக்கில் அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப் பேடி குழுவின் அறிக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவிற்கேற்ப இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நடவடிக்கை என்ன ?

தமிழக சட்டசபையில் கேள்விநேரம் முடிந்த பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்., தூத்துக்குடி, மதுரை, மாவட்டங்களில் தாது மணல் வெட்டியெடுப்பது குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங்பேடி தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த குழுவின் அறிக்கை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. 4 வருடமாகியும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. நான்கு வருடமாகியும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதுப்பற்றி கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் அப்படிப்பட்ட கொள்கை முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.


நீட்டிப்பு உத்தரவு

அவரது கவன ஈர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் தாது மணல் அனுமதியின்றி வெட்டியெடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அரசு 2013-ம் ஆண்டிலேயே ககன்தீப் சிங் பேடி, தலைமையில் சிறப்பு குழு அமைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனிம சுரங்க குத்தகை பகுதிகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஆணையிட்டது. பின்னர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இச்சிறப்புக் குழுவே ஆய்வு செய்ய நீட்டிப்பு உத்தரவு வழங்கப்பட்டது.

ஆய்வறிக்கை தாக்கல்

அதனை தொடர்ந்து தாது மணல் வெட்டியெடுப்பது கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 2013-ம் ஆண்டு முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் அரசினால் தடை செய்யப்பட்டு நடை சீட்டு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ககன்தீப் சிங் பேடி, ஆய்வறிக்கை பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு செப்டம்பர் 4-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

ஆய்வு நடந்து வருகிறது

உயர்நீதிமன்றத்தில் தாதுமணல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசகராக ஏ.சுரேஷ் 2016-ல் நியமிக்கப்பட்டார். மேற்படி தாதுமணல் தொடர்பான ஒரு பொது நல வழக்கின் விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றம் அரசு செயலர் அந்தஸ்தில் சத்தியப்ரதா சாகு, தலைமையில் குழு அமைத்து அதில் மத்திய அரசை சார்ந்த இந்திய அணுசக்தி துறை, ஐ.பி.எம், சுங்கம் மற்றும் கலால் துறை அலுவலர்களுடன் கனிமம் மற்றும் சுரங்கத் துறை, வருவாய்த் துறை, நிலஅளவை ஆகிய துறைகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டு, தற்சமயம் கடற்கரை மாவட்டங்களில் தாது மணல் மற்றும் அணுசக்தி கனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், இந்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
மேற்படி, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு தன்னுடைய 23.5.2017 தேதிய கடிதத்தில் மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசை சார்ந்த பாஸ்கராச்சாரியா செயற்கைகோள் விண்வெளி பயன்பாடு மற்றும் புவி தகவல் ஆய்வு அமைப்பின் உதவியுடன் கடற்கரை மாவட்டங்களில் உள்ள தாது மணல் படிவு பகுதிகள் முழுவதும் செயற்கைகோள் மூலம் கண்காணித்து அறிக்கை தரகோரியுள்ளது.

கண்காணிப்பு பணி

உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடற்கரை மாவட்டங்களில் தாது மணல் வெட்டியெடுப்பது அரசினால் தடை செய்யப்பட்டப் பின்பும், அனுமதியின்றி தாதுமணல் வெட்டியெடுக்கப்படுவதாக நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டதால், நீதிமன்ற ஆணையின்படி தாதுமணல் வெட்டியெடுப்பதை முழுவதும் தடுக்கும் நோக்கிலும், வாகனங்களை தணிக்கை செய்யவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட  ஆட்சித் தலைவர்கள் மூலம் மாவட்டத்தில் பணிபுரியும் துணை ஆட்சியர், காவல்துறை, கனிமவளத்துறை, நிலஅளவை துறை மற்றும் இதர துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்க அரசினால் அறிவுறுத்தப்பட்டு, உரியகண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆலோசகர் ஏ.சுரேஷ் தனது அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மேலும், இவ்வழக்குகளில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Bigg Boss 2 Tamil | Bigg Boss Day 1 Promo 3 | 18.06.2018

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

ரம்ஜான் பிரியாணி | Ramzan Special Chicken Biryani in Tamil | Iftaar Special Biryani Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து