சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்க்கும் ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில்

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      ஆன்மிகம்
rasipuram kailasanathar

ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இத்திருத்தலமானது நாமக்கல்லிலிருந்து சுமார் 31 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் 500 வருடங்கள் பழமைவாய்ந்தது. இத்திருத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், உற்சவர் சோமாஸ்கந்தர், அம்மன் தாயார் அறம் வளர்த்த நாயகி ஆவார். மேலும் இத்தல பெருமைகள் பற்றி அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார். இத்தலத்தில் நெல்லி விருட்சமரமாக உள்ளது.

இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் லிங்கத்தின் மேல் அம்பு பட்ட தலும்பு ஒன்று இருப்பது சிறம்பம்சமாகும். இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையை தலைநகரமாகக் கொண்டு வல்வில் ஒரி என்னும் மன்னன் இராசிபுரம் பகுதிகளையும் ஆட்சி செய்து கொண்டு வந்தான். வல்வில் ஒரி ஒரு சிவபக்தன். வில்வித்தையிலும் சிறந்த வீரம். இராசிபுரம் பகுதியில் வேட்டைக்கு வந்த மன்னனுக்கு வனத்தில் ஒரு மிருகம் கூட கண்ணுக்கு தென்படவில்லை. அலைந்து சோர்ந்து போன நேரத்தில் ஓரிடத்தில் வென்பன்றி ஒன்றைக் கண்டான். உடனே அப்பன்றியை தூரத்திக் கொண்டு அதன் மீது அம்பை எய்தான். எய்த அம்பு பன்றியின் மேல் தாக்கியும் பன்றி நிற்காமல் ஓடியது. மன்னன் பன்றியை வெகுதூரம் பின் தொடர்ந்தான். நீண்டதூரம் ஓடி பன்றி ஓரிடத்தில் ஒரு புதருக்குள் ஓடி மறைந்து விட்டது. மன்னன் புதரை விலக்கி பார்த்தபோது அவ்விடத்தில் சுயம்புலிங்கமாக தோன்றிய ஒரு லிங்கத்தைக் கண்டான். மன்னன் எய்த அம்பு பட்டு லிங்கத்தின் நெற்றியில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு கலங்கிய மன்னன் சிவனை வணங்கினான். மன்னனுக்கு சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி தானே பன்றியாக வந்ததை உணர்த்தினார். உடனே மன்னன் சுயம்புலிங்கம் தோன்றிய இடத்திலேயே சிவபெருமானுக்கு கோவில் எழுப்பத் தொடங்கினான். வல்வில் ஒரி மன்னனுக்கு பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தடியில் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதில் மன்னன் வில், அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி காட்சியளிக்கிறார். ஆடிப் பெருக்கன்று இக்கோவிலைக் கட்டிய வல்வில் ஒரி மன்னனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன. பொங்கல், சுண்டல், நைவேத்யம் செய்து விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றன.

இத்தல விநாயகர் சகட விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். கைலாசநாதர் தலத்தின் பிரகார வலத்தை முதலில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் சன்னதியும், பிரகாரத்தின் முடிவில்இராமேஸ்வரர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது. காசி, இராமேஸ்வரம் தலங்களில் எழுந்தருளும் சிவனை இத்தலத்தில் தரிசிக்கும் விதமாக விஸ்வநாதர் சன்னதி விமானம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் விசேஷமானதாகும்.

மேலும் இத்தலத்தில் அம்பாள் சன்னதி அருகில் முருகன் பாலதண்டாயுதபாணியாகவும், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கிறார். இவ்வாறு இத்தலத்தில் முருகப்பெருமானின் இரண்டு கோலங்களையும் நாம் தரிசிக்கலாம்.

பொதுவாக சிவராத்திரியின் போது சிவனுக்கு இரவில் நான்கு கால பூஜைகள் நடப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் ஆறு கால பூஜைகள் செய்கின்றார்கள். அம்பாள் அறம் வளர்த்த நாயகி தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். நாயகிக்கு முன்புறம் மகாமேரு அமைந்துள்ளது.  மேலும் ஹோமங்கள் நடைபெறுகின்றன. கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர் எதிரே நந்தியுடன் காட்சி தருவது விசேஷம். இவரை வணங்கிவிட்டே கோயி லுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சிவன் கோஷ்டத்தில் சிவதுர்க்கையாக காட்சி தருகிறாள். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று சிவதுர்க்கைக்கு சங்காபிஷேகம் செய்யப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தெட்சிணாமூர்த்திக்கு தனியே உற்சவர் இருக்கிறார். இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று இவர் தெட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஹோமங்கள் நடக்கின்றன. அந்நேரத்தில் இவரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை பிரசாதமாக தருகின்றார்கள்.

நாகருக்கு இத்தலத்தில் தனிச் சன்னதி உள்ளது. நாகதோஷமுள்ளவர்கள், தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணத் தடையுள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு மஞ்சள் பூ, சர்க்கரைப் பொங்கல் படைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கையுள்ளது. காலபைரவர், சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, ஏகாதச ருத்ரபாராயணம் நடைபெறுகின்றது. 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது. மேலும் பஞ்சலிங்கம், கஜலெட்சுமி, சரஸ்வதி, நாயன்மார்கள், நால்வர், ஐயப்பன் மற்றும் சந்தான குறவர்களும் உள்ளனர்.

அறம் வளர்த்த நாயகி சன்னதியில் வளர்பிறை பிரதோஷத்தின் போது உச்சிக்காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு விசேஷ வழிபாடு நடக்கின்றது. அப்போது தேங்காய், பழம், அரிசி மற்றும் உப்பில்லாத சாதம் முதலானவற்றை நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றார்கள். இவ்வாறு செய்வதால் புத்திரப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

இந்த கோவில் பிரகாரத்தில் கங்கை தீர்த்தம் தானாக தோன்றியதாக சொல்கிறார்கள். சிவஅம்சமான வீரபத்திரருக்கு சன்னதி மற்றும் இவருக்கு எதிரே நந்தி அமைந்துள்ளது. அருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட புடைப்புச் சிற்பமாக சகட விநாயகர் இருக்கிறார். கையில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் இவரை வணங்கிட கல்வியில் சிறப்பிடலாம் என்பது நம்பிக்கை.

கைலாசநாதரிடம் வேண்டிக் கொண்டால் கலைகளில் சிறப்பிடம் பெறலாம். சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுகிறார்கள். சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசியில் விசாகம், தையில் தைப்பூசம், மாசியில் மாசிமகம், பங்குனியில் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கும்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து