ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அம்மா இ-கிராமம்’: வை-பை, தொலை மருத்துவம், தொலைக் கல்வி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      தமிழகம்
assembly 2017 07 14

சென்னை, ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அம்மா இ-கிராமம்’ தெரிவு செய்யப்பட்டு அந்த கிராமத்திற்கு வை-பை வசதி மற்றும் தொலை மருத்துவம், தொலைக் கல்வி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை படித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு, தேசிய மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஒரு பகிர்வு திட்டமாகும். இந்த வலையமைப்பு தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வலையமைப்பு இரண்டு படிநிலைகளை கொண்டு, முதல் நிலையில் மாநில தலைநகரத்துடன் மாவட்ட தலைநகரங்களும், இரண்டாம் நிலையில் மாவட்ட தலைநகரங்களுடன் வருவாய்க் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பின் இரண்டு கட்ட செயல்பாடுகள் முடிவடைந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட செயல்பாடுகள் 2017-2022 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 437 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது அரசு துறைகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பயன் அளிக்கக் கூடியதாக அமையும்.


அம்மா இ-கிராமம்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘‘அம்மா இ-கிராமம்” என ஒரு கிராமம் தெரிவு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு, தகவல் தொழில் நுட்பவியல் வசதியினை கொண்ட கம்பியில்லா ஹாட்ஸ்பாட், திறன்மிகு தெரு விளக்குகள், தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற சேவைகள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனங்களின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியிலிருந்தும் மற்றும் அந்தந்தத் துறைகளின் திட்ட ஒதுக்கீட்டிலிருந்தும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஊராட்சி அளவில் இது வரை கிடைக்கப் பெறாத நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை கிராமங்களுக்குக் கொண்டு செல்ல முடியும். அதாவது, மின்வகுப்பறைகள் மூலம் பிற இடங்களில் நடத்தப்படும் சிறப்பான பாடத் திட்டங்களை காணொலிக்காட்சி மூலமும், இணையவழி மூலமும் கிராமப் பள்ளிகளை அடையச் செய்யலாம். அதுபோன்றே பெரிய நகரங்களில் உள்ள சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளை கிராமத்தில் இருந்து கொண்டே தொலை மருத்துவம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நெட்' திட்டம்

தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளை ஆப்டிகல் பைபர் மூலம் இணைத்து அரசின் பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு சென்று அடைய மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் எனது முன்னிலையில் 25.4.2017 அன்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்திடப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் செயல்படுத்தப்படும் மேற்கண்ட திட்டத்தின் பயன்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளையும் சென்றடைய ஆப்டிகல் பைபர் மூலம் இணைத்து, டிஜிட்டல் புரட்சியின் பயன்களை தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் பயன்பெறும் வகையிலும், அவரவர் இல்லங்களுக்கு அருகில் தமிழ்நாடு அரசின் பல்வேறு சேவைகளை இணையம் மூலம் பெறவும், நகர்ப்புற பகுதிகளிலும் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் ‘‘தமிழ்நெட்” என்று அழைக்கப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் போன்ற நிறுவனங்களிடமிருந்தும், பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ல்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து