20 ஆயிரம் பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      தமிழகம்
cm palanisamy 2017 06 02

சென்னை, பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மருத்துவ நிலையங்கள்

சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நடப்பாண்டில், 49 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் 150 கால்நடை மருத்துவ நிலையங்கள் நபார்டு வங்கியின் நிதியுதவிடன் புதிதாகக் கட்டப்படும். நடப்பாண்டில், 93.86 லட்சம் கால்நடைகளுக்கு நோய்த் தொற்றுகளை தடுக்கும் வகையில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பூசிகள் போடப்படும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ்கோடு வெளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி உள்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடன் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் 14 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.


உட்கட்டமைப்பு வசதிகள்

உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதலாக பெறப்படும் பாலை கையாள திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், வேலூர், காஞ்சிபுரம் - திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் குளிர்பதன வசதி, நவீன பாலகம் அமைத்தல், பால் பதப்படுத்தும் இயந்திரங்கள் நிறுவுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்துதல், தீவனக் கிடங்குகள், நெய் நிரப்பும் இயந்திரங்கள், தரக்கட்டுப்பாடு ஆய்வகம், பால் பை நிரப்பும் இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

20,000 பணியாளர்களுக்கு ...

தமிழகத்தில் கிராம அளவில் சுமார் 12,000 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கிராம அளவில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால்கொள்முதல் செய்யும் பணியுடன், பால் தரப் பரிசோதனை செய்தல், கால்நடை தீவனம் வழங்குதல் போன்ற இதர பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 20,000 பணியாளர்களுக்கு, அச்சங்கங்களின் பால் உற்பத்தி மற்றும் அவை ஈட்டும் இலாபம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவர்களது ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறுவைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து, அவர்களது பணிமூப்பு அடிப்படையில், அனைத்து முதுநிலை பணியாளர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், மாற்று ஏற்பாடாக பணப்பயன்பெறும் மாற்றுத் திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.

ஊதிய உயர்வு

தொடக்க பால் உற்பத்தியாளர்கள்சங்கங்களின் 20,000 பணியாளர்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், அவர்களுக்குமாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதற்கான 5 கோடி ரூபாய் செலவினம் சங்க நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். 2012-ம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் இந்தியாவிலேயே முதலாவது மீன்வளப் பல்கலைக்கழகத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். தற்போது, மீன்வளப்பிரிவில் தேவைப்படும் மனிதவளத் தேவையினைபூர்த்தி செய்திடும் வகையில் நடப்பாண்டில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு பேரூராட்சியில் அமைந்துள்ள ஓரடியம்புலம் கிராமத்தில் ஒரு புதிய மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் துவக்கப்படும். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தின்கீழ் நிறுவப்படும் இந்த புதிய மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடப்பாண்டிலிருந்து 20 மாணவர்கள் மீன்வள இளநிலை பட்டப்படிப்பிற்கு சேர்க்கப்படுவார்கள்.

மீன்வள ஆராய்ச்சி நிலையம்

இந்த மீன்வளக் கல்லூரிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் 15 ஏக்கர்பரப்பிலும், 50 ஏக்கர் பரப்பளவில் நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பண்ணைகளும் அமைக்கப்படும். இந்த மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினை அமைப்பதற்கு 28 கோடியே 82 லட்சம் ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்படும். சென்னை, இராயபுரத்தில் ஒரு மீன்வளப் பயிற்சி நிலையமும், மீன்வளர்ப்புத் தொழில்நுட்பங்களில் பல்வேறு பயிற்சிகள் வழங்க காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காட்டிலுள்ள மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்சி மையமும் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

முதுகலைப் பட்டப்படிப்பு

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின், சென்னையிலுள்ள வாணியஞ்சாவடி முதுகலை பட்ட மேற்படிப்பு வளாகத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக ‘மீன்வள வணிக மேலாண்மை’ முதுகலைப் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் 40 மாணவர்கள் நடப்பாண்டிலிருந்து சேர்க்கப்படுவார்கள். மேலும், மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன்,கடல்சார் உயிர் தொழில்நுட்ப முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு 12 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவை தவிர, இந்தியாவிலேயே முதன்முதலாக ‘மீன்வள மருந்தியலில்’ முதுகலைப் பட்டப்படிப்பும் தொடங்கப்படும். இந்த நிலையத்தில் நவீன நூலகம் , அதி நவீன ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சியினை மேற்கொள்ள உயிரணு மரபியல், மூலக்கூறு உயிரியல், மரபுசங்கிலி தொடர் வேதிவினை, நொதியியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிர்-வேதியியல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். இந்த மீன்வள முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான கூடுதல் கல்விக் கூட வசதிகள் 6 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து