திருப்பூர் குமரன், பூலித்தேவன் உள்ளிட்ட 57 பேருக்கு ஆண்டு தோறும் அரசு விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      தமிழகம்
Kadambur Raju

சென்னை, திருப்பூர் குமரன், பூலித்தேவன் உள்ளிட்ட 30 தலைவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாடப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.

அரசு விழாக்கள்

செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானியகோரிக்கையின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: -


தமிழ்ச்சான்றோர்கள், விடுதலைப்போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழக அரசின் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா கொண்டப்படும் வகையில், தமிழகத்தில் 64 மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சென்னையில் 27 தலைவர்களுக்கும், பிற மாவட்டங்களில் 30 தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டு தோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலும் கொண்டாடப்படுகிறது. கொடிக்காத்த குமரன் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவரின் பிறந்தநாள் விழா தொடரும் செலவினமாக ரூ.25 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும். விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழா திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் செவலில் தொடரும் செலவினமாக ரூ.25 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும்.

குறும்படம் தயாரிக்க ...

எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் பயிற்சி மற்றும் குறும்படம் தயாரிக்க ஆண்டுதோறும் வெளிமுகமை மூலம் நவீன தொழில்நுட்பக் கருவிகள் பெற்றிட ரூ.75 லட்சத்திலிருந்து ரூ. 1.50 கோடியாக நிதி உயர்த்தி வழங்கப்படும். எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆண்டு தோறும் குறும்படம் தயாரிப்பதற்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு திரைப்படப் பிரிவு கட்டடம் ரூ.55 லட்சத்தில் புதுப்பிக்கப்படும். அரசு பொருட்காட்சி நடைபெறுவதை கிராம அளவில் விளம்பரப்படுத்த மின்னணுத் திரையுடன் கூடிய விளம்பர வாகனம் ரூ.10.50 லட்சம் செலவில் வாங்கப்படும். இதற்காக ஓட்டுனர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் வாகனசீராளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். தமிழரசு இதழ்களுக்கான ஆண்டு மற்றும் ஆயுள் சந்தா விவரங்களை பதிவு செய்ய நவீன மென்பொருள் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

சிற்றுண்டிப்படி உயர்வு

அனைத்து துறைகளின் நிலைப்படுத்தப்பட்ட படிவங்களை அச்சடிக்க தேவையான அச்சு தகடுகளைத் தயாரிக்க புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்திற்கு பிளேட் எக்ஸ்போசர் இயந்திரம் ரூ.3,25.000 செலவில் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட அரசிதழ்கள் அச்சிட திருச்சி அரசு கிளை அச்சகத்திற்கு சிறிய கல்லச்சு இயந்திரமும், அச்சடிக்கப்பட்ட காகிதங்களை எடுத்துச் செல்ல நீரழுத்த விசைத் தள்ளுவண்டியும் ரூ.8 லட்சத்து 27 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட அரசிதழ்கள் அச்சிட புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்திற்கு சிறிய கல்லச்சு இயந்திரம் ரூ.8 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும். வலை கல்லச்சுமப் பொறியில் எண்ணிடும் பணியினை மேற்கொள்ள,மதுரை,சேலம் அரசு கிளை அச்சகத்திற்கு எண்மிய முறையில் எண்ணிடும் இயந்திரம் தலா 16 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்படும். அரசு அச்சகங்களில் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிற்றுண்டிப்படி 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அரசு அச்சகங்களில் பணிபுரியும் பெண் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இரு மேலங்கிகளுக்கான தையல்கூலி தொகை 350 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், ஆண் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 ஜோடிகளுக்கான தையல்கூலித் தொகை 800 ரூபாயில் இருந்து 1200 ருபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து