முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி வார நிறைவு விழா ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்புத்துறையின் சார்பில் தொழில்திறன் வளர்ப்பு பயிற்சி வார நிறைவு விழா கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட வேலைவாயப்புத் துறை மற்றும் தமிழ்நாடு பயிற்சி மேம்பாட்டு கழகம் சார்பாக நடைபெற்ற தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி வாரத்தின் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், தொழில் திறன் வளர் வார விழாவை முன்னிட்டு (10.07.2017 முதல் 15.07.2017 வரை) நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 15-ம் நாள் உலக இளைஞர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம், அனைத்து மாவட்டங்களிலும்  ஜூலை 10 முதல் ஜூலை 15 முடிய திறன் வார விழாவாக கொண்டாட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக கடந்த 6 நாட்களில் பல்வேறு தொழில் நெறி வளர்ப்பு பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புயர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக திறன் வளர் பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் விபரங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இணையதளத்தில் பதிவு செய்தல், திறன் பயிற்சி குறித்த வினாடி வினா, பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், படங்கள் வரைதல், கட்டுரை எழுதுதல், தொழிலதிபர்கள் சிறந்த வேலைவாய்ப்பில் உள்ளோர், பெரிய நிறுவனங்களில் அதிகாரியாக உள்ளோர் ஆகியோருடன் பொதுமக்கள் மற்றும் தொழில்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
 இது தவிர, கட்டுமானத் துறையில் பணிபுரியும் மேசன், பிளம்பர், கார்பென்டர் ஆகியோருக்கும்,  உணவகங்களில் பணிபுரியும் சமயலர், உணவு பரிமாறுவோர், ஹவுஸ் கீப்பர் போன்றோருக்கும் அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே திறன் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சான்றிதழ்கள் மூலம் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு வருங்காலத்தில் உயரிய வேலைவாய்ப்பு பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும். இவ்வாறு பேசினார். முன்னதாக மாவட்ட கலெக்டர் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி பாரதி நகரில் துவங்கி இராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மு.அபுபக்கர் சித்திக், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் (பொ) ரமேஷ்குமார், பயிற்சி அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்டோர் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து