முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்டிகல்ஸ்’ கடைகளை முறைப்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவு

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, தற்போது ஆப்டிகல்ஸ் கடைகள் மாநில நிறுவனங்கள் சட்டப்படி அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றின் மீது எந்த கண்காணிப்பும் மேற் கொள்ளப்படுவதில்லை. எனவே ஆப்டிகல்ஸ் கடைகளுக்கான விதிமுறைகளை வரையறை செய்து, அவற்றை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கண் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் உறுப்பினரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் கண் மருத்துவத் துறை பேராசிரியருமான அத்துல்குமார் கூறியபோது, “கண் மருத்துவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இது தொடர்பாக பேச உள்ளோம். இதற்கு முன் அரசு சார்பில் ஏதேனும் விதிகள் உள்ளனவா என ஆராய உள்ளோம். ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். பின்னர் இவை அமலுக்கு வரும்” என்றார்.

கண் மருத்துவர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பம் பயின்றவர்கள் சகல வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் கண் பரிசோதனை செய்கின்றனர். மூக்குக் கண்ணாடிகளுக்கு இவர்களின் பரிந்துரையை பெறுவதே சரியானது. ஆனால் ஆப்டிகல்ஸ் கடைகளே பரிசோதனை மேற்கொள்வதால் பலநேரங்களில் பிரச்சினை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே ஆப்டிகல்ஸ் கடைகளை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்திய கண் பரிசோதனை கவுன்சில் புள்ளிவிவரப்படி, நாட்டில் சுமார் 45 கோடி மக்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த எண்ணிக்கை, கண் பரிசோதனைகளில் ஏற்படும் 50 சதவீத தவறுகளால் அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் கண் பரிசோதகர்கள் நாட்டுக்கு தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது வெறும் 9,000 கண் பரிசோதகர்கள் மட்டுமே உள்ளனர்.

இவர்கள் பயிற்சிக்கான கல்லூரிகளும் 20 மட்டும் இருப்பதால் அதில், ஆண்டுக்கு ஆயிரம் பரிசோதகர்கள் மட்டுமே வெளிவருகின்றனர். இந்த எண்ணிக்கை போதாது எனவும் இந்திய கண் பரிசோதனை கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து