மருத்துவ மாணவர் சேர்க்கை: 85 சதவீத ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு அப்பீல்

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      தமிழகம்
Tn-Govt-Top(C)

சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டதில் படித்தோருக்கு 85 சதவீதம்  உள் ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடையே இவ்வழக்கில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் தங்களது கருத்தை கேட்க வேண்டும் என கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக அரசு ஆணை

நீட் எனும் தகுதித் தேர்வால் தமிழக மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மார்க் இருந்த போதும் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் இல்லாததால் மருத்துவ படிப்பு என்பதே தமிழக மாணவர்களுக்கு இல்லாத ஒன்றாகிவிட்டது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் மருத்துவ மாணவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.


மேல்முறையீடு

ஆனால் இந்த ஆணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் பெஞ்ச் முன்பாக நேற்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அதேபோல் சிபிஎஸ்இ மாணவர்களும் ஒரு கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் தங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என அந்த மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து