முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடுங்கையூர் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை தி.மு.க. புகாருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை, கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க. புகாருக்கு சட்டசபையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

உறுப்பினர் கேள்வி ...

கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு படை வீரர் உயிரிழந்தார். ஏராளமானவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான பிரச்சினையை நேற்ரு சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. மாதவரம் சுதர்சனம் எழுப்பினார். தீ விபத்தில் காயம் அடைந்த அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சாதாரண மக்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டினார்.

பணி நியமனம் ...

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-

15.7.2017 அன்று இரவு 11.17 மணியளவில் கண்ணதாசன் நகர், கொடுங்கையூரில் மூடியுள்ள பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக ஸ்டேன்லி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 நோயாளர் ஊர்திகள் மற்றும் தனியார் ஊர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்போர் ஏகராஜ் தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் ஏற்பட்ட தீக்காயங்களில் உயிரிழந்தார். அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இழப்பீட்டு தொகை

மேலும், முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயும், கருணைத் தொகை 10 லட்சம் ரூபாயும், என மொத்தம் 13 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்திருந்த தீயணைப்போர் ராஜதுரை மற்றும் லட்சுமணன் ஆகியோரது உறவினர்களின் வேண்டுகோளின்படி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை மானிய கோரிக்கையின்போது நான் அறிவித்த “எதிர்பாரா மருத்துவ நல நிதி” மூலம் இவர்களுக்கான மருத்துவ செலவு மேற்கொள்ளப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 4 நபர்கள் ...

வெளிக்காயங்களுடன் இயந்திர கம்மியர் ஓட்டி ஜெயபாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று 17.7.2017 அன்று வீடு திரும்பியுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு 30 நபர்கள் கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தீக்காயங்களுடன் தீக்காயப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அன்றே, மேலும் 4 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

48 பேருக்கு ...

இதே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 நபர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டும் மற்றும் 2 நபர்கள் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவரையும் சேர்த்து மொத்தம் 48 பேருக்கு இச்சம்பவத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 5 நபர்கள், தீயணைப்பு படை வீரர்கள் 4 நபர்கள், ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மற்றும் பொது மக்கள் 38 பேர் ஆவர்.

புகையினால் பாதிப்பு ...

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முகம் மற்றும் மூச்சு குழாய்களில் வெப்பம் மற்றும் புகையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 32 நபர்களில், 12 நபர்கள் மருத்துவர் அனுமதியின்றி, உறவினர்களின் வேண்டுகோளின்படி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள். மீதமுள்ள 20 நபர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 10 நபர்கள் ஸ்டான்லி மருத்துவ மனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

16 நபர்களுக்கு ...

நேற்று (நேற்று முன்தினம்) ஜெயபாலன், தீயணைப்புத்துறை வீரர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ள 39 நபர்களில் 5 நபர்களுக்கு 60 முதல் 82 விழுக்காடு வரை தீக்காயங்கள் உள்ளன, 16 நபர்களுக்கு 40 முதல் 60 விழுக்காடு வரை தீக்காயங்கள் உள்ளது.12 நபர்களுக்கு, 20 முதல் 40 விழுக்காடுவரை தீக்காயங்கள் உள்ளன. மீதமுள்ள 6 நபர்களுக்கு 20 விழுக்காட்டிற்கு குறைவாக தீக்காயங்கள் உள்ளன.

வெளி நோயாளியாக ...

காவல்துறையைச் சேர்ந்தவர்களில் இருவர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றனர். 3 காவல்துறையைச் சேர்ந்தவர்களும், ஊர்க் காவல்படை வீரர் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து பொதுமக்களும் உறவினர்களின் வேண்டுகோளின்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிறு தீக்காயங்களுடன் இரண்டு பொதுமக்கள் மருத்துவர் அனுமதியின்றி வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்றுவரும் அனைத்து உள் நோயாளிகளுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பேராசிரியர்கள், ஒட்டுறுப்பு அறுவை சிசிக்சை உதவி பேராசிரியர்கள் மற்றும் உள்ளிருப்பு மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட அனைவரையும் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், 16.7.2017 அன்று காலை 7 மணி முதல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர்,பொது மருத்துவர், அறுவை சிகிக்சை மருத்துவர்,கண் மருத்துவர், எலும்பு சிகிச்சை நிபுணர், மயக்கவியல் நிபுணர், நரம்பு சிகிச்சை நிபுணர், சிறுநீரக சிகிச்சை நிபுணர், குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர், மனநல சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 35 செவிலியர்கள் உள்ளடக்கிய ஒரு சிறப்பு மருத்துவக் குழு ஏற்படுத்தப்பட்டு, இக்குழு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

உயர்தர சிகிச்சை ...

தீக்காயம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையான உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில், தேவையான அனைத்து மருந்துகள், கருவிகள், பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம்சாரா பணியாளர்கள் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை நிலைக்கு மாறானது.

தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து