முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட-தென்கொரிய ராணுவ அதிகாரிகள் 1-ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை?

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

Source: provided

சியோல் :  வட–தென்கொரிய ராணுவ அதிகாரிகள் வருகிற 1-ம் தேதி சந்தித்து பேசுவதற்கு செஞ்சிலுவை சங்கம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஏவகணை சோதனை

வடகொரியா நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன், தென்கொரியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். எல்லையில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அணுகுண்டு, நவீன ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது நடத்தி, தென்கொரியாவுக்கும் அதற்கு நட்பு நாடான அமெரிக்காவுக்கும் பீதியை அளித்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவை தாக்கும் வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை சோதனையையும் வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

அதிபர் ஜே-இன் ...

இந்த நிலையில் கடந்த மே மாதம் தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற மூன் ஜே–இன் போர் பதற்றத்தை தணித்து இரு நாடுகளும் அமைதி காண நடவடிக்கை எடுத்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு வடகொரிய தலைவரை சந்தித்து பேசத் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் கூறி இருந்தார்.

செஞ்சிலுவை சங்கம்

இந்த நிலையில் 1950–53–ம் ஆண்டுகளில் கொரிய போர் காரணமாக பிரிந்த பல லட்சம் குடும்பத்தினரை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சியை சியோல் நகர செஞ்சிலுவை சங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி வட–தென்கொரிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேசுவதற்கான அரிய வாய்ப்பும் உருவாகி இருக்கிறது.

பேச்சுவார்த்தை

இதை பயன்படுத்திக் கொண்டு வருகிற 21-ம் தேதி இரு நாடுகளின் எல்லையில் உள்ள ‘பான்முன்ஜோம்; சமாதான கிராமத்தில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம்’ என்று தென்கொரிய ராணுவ அமைச்சகம் செஞ்சிலுவை சங்கத்திடம் பரிந்துரை செய்து இருக்கிறது.

ஆனால், தென்கொரிய ராணுவ அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ள அதே கிராமத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 1-ம் தேதி இரு தரப்பு பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளலாம் என்று செஞ்சிலுவை சங்கம் தென்கொரியாவை கேட்டுக்கொண்டு உள்ளது.

இதுபற்றி தென்கொரிய ராணுவ அமைச்சகம் விடுத்த செய்திக்குறிப்பில் ‘இரு நாடுகளின் எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைக்கான பரிந்துரையை வைத்திருக்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.

எதிர்பார்க்கிறோம்

இதுபற்றி தென்கொரிய செஞ்சிலுவை சங்கம் கூறுகையில், ‘எங்களது முயற்சிக்கு வடகொரியா சாதகமான பதிலை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடந்துவிட்டால் பிரிந்துபோன லட்சக்கணக்கான குடும்பத்தினரை மீண்டும் ஒன்று சேர்க்கும் பணி வருகிற அக்டோபர் மாதம் முதல் தொடங்கிவிடும்’ என்று தெரிவித்து உள்ளது. 

இந்த பேச்சுவார்த்தை சாத்தியமானால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாடுகள் இடையேயும் நடத்தப்படும் முதல் பேச்சுவார்த்தை இதுவாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து