முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 388 ரன்களை சேஸிங் செய்து இலங்கை அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 18 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : கொழும்பில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 388 ரன்கள் இலக்கை எட்டி இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஹெராத் 5 விக்கெட்

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே எர்வின் (160) சதத்தால் 356 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

2-வது இன்னிங்ஸ் ...

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் உபுல் தரங்கா (71), சண்டிமல் (55), மேத்யூஸ் (41), குணரத்னே (45) ஆகியோரின் ஆட்டத்தில் இலங்கை முதல் இன்னிங்சில் 346 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 10 ரன்கள் முன்னிலையுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. சிகந்தர் ரசாவின் அபார சதத்தால் (127) அந்த அணி 377 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ஹெராத் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

4-வது நாள் ஆட்டம்

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஜிம்பாப்வே அணி 387 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் 4-வது நாள் ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. குசால் மெண்டிஸ் 60 ரன்னுடனும், மேத்யூஸ் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

டிக்வெல்லா 81 ரன்

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. குசால் மெண்டிஸ் மேலும் 6 ரன்கள் எடுத்த நிலையிலும், மேத்யூஸ் மேலும் 8 ரன்க்ள எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் டிக்வெல்லா உடன், குணரத்னே ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இலங்கை அணி வெற்றியை நோக்கிச் சென்றது. இருவரும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வந்த நிலையில், டிக்வெல்லா 81 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்து இலங்கை அணியின் வெற்றிக்கு உற்சாகம் அளித்தனர். டிக்வெல்லா அவுட்டாகும்போது இலங்கை 324 ரன்கள் எடுத்திருந்தது.

அபார வெற்றி ...

டிக்வெல்லாவையடுத்து பெரேரா களம் இறங்கினார். குணரத்னே, பெரேரா உடன் இணைந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். இலங்கை அணி 114.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குணரத்னே - பெரேரா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. குணரத்னே 80 ரன்களுடனும், பெரேரா 28 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். முதல் இன்னிங்சில் 45 ரன்னும், 2-வது இன்னிங்சில் 80 ரன்களும் சேர்த்த குணரத்னே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து