முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் 14-வது ஜனாதிபதி யார் ? ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை

புதன்கிழமை, 19 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கடந்த 17-ம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று டெல்லியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை அடுத்து நாட்டின் 14- வது ஜனாதிபதி யார் என்பது தெரியவரும்.

புதிய ஜனாதிபதியை ...

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை ஒருமனதாக தேர்ந்தெடுக்க ஆளும் பாரதிய ஜனதா சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினர். அப்போது ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பீகார் மாநில கவர்னராக இருந்து ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சுற்றுப்பயணம் - ஆதரவு

இதனையடுத்து காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகள் சார்பாக லோக்சபை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டு வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவு கோரி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். இரண்டு வேட்பாளர்களும் தலித் இனத்தவர்கள். இருந்தபோதிலும் கொள்கை மற்றும் கோட்பாடு அடிப்படையில் போட்டியிடுவதாகவும் இருவரும் அறிவித்தனர். நாட்டில் சாதிக்கொடுமை ஒழிய வேண்டும். மனசாட்சிப்படி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க வேண்டும் மீராகுமார் கேட்டுக்கொண்டார். அதேசமயத்தில் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன் என்றும் அதன்படி நடப்பேன் என்றும் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல்

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கூட்டணி சார்பில்  மீராகுமார் போட்டியிட்டனர். டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில்  பிரதமர்  நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மாநிலங்களை பொறுத்தவரை தலைமைச்செயலகங்களில் முதல்வர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி. கே. பழனிசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மத்திய அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன், கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.  அப்துல்லா ஆகியோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் காரணமாக வாக்களிக்கவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வாக்களிக்கவில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இருந்தபோதிலும்  99 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.

சிறப்பு ஏற்பாடுகள்

இதற்காக டெல்லியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி சில மணி நேரத்தில் நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது, பிஜூ ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், தெலிங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்திருப்பதால் அவரது வெற்றி உறுதி என்று தெரிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவருக்கு பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது. ஜனாதிபதி மாளிகையில் இதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.

துணை-ஜனாதிபதி தேர்தல்

இதற்கிடையில் துணைஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரி பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பாக மகாத்மா காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு அளிக்கும் என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து