முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா மீது போர்தொடுக்க தயார் நிலையில் சீனா: பார்லி.யில் முலாயம் சிங் யாதவ் எச்சரிக்கை

புதன்கிழமை, 19 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராக இருக்கிறது என்று மத்திய அரசை முன்னாள் ராணுவ அமைச்சர் முலாயம் சிங் எச்சரித்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தின் டோக்லம் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையை பாராளுமன்ற லோக்சபையில்  முன்னாள் ராணுவ அமைச்சரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் எழுப்பி பேசியதாவது:-

என்ன நடவடிக்கை

பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. அதனால் இந்தியா தனது நிலையை மாற்றிக்கொண்டு திபெத் சுதந்திரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். அண்டை நாட்டிடம் இருந்து சவால் எதுவும் வந்தால் அதை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்க வேண்டும்.

பெரும் அச்சுறுத்தல்

சீனாவிடம் இருந்து இந்தியா பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. பல ஆண்டுகளாக மத்திய அரசை நான் எச்சரித்து வருகிறேன். பாகிஸ்தானும் சீனாவும் கைகோர்த்து வருகிறது. இந்தியா மீது போர்தொடுக்க சீனா முழுதயார் நிலையில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய எதிரி சீனா. சீனாவை சமாளிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது.

சரியான தருணம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் சீன ராணுவத்தினர் சேர்ந்துள்ளனர். இந்தியாவை தாக்குவதற்காக பாகிஸ்தான் மண்ணில் சீனா அணுகுண்டை புதைத்து வைத்திருக்கிறது. இது இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு நன்றாகவே தெரியும். திபெத் நாடானது சீனாவின் ஒரு பகுதி என்று இந்தியா சம்மதித்தது தவறாகும். தற்போது திபெத்தின் சுதந்திரத்தை இந்தியா அங்கீகரிக்க சரியான தருணம் வந்துவிட்டது.

அங்கீகரிக்க வேண்டும்

பெரிய நாடுகளான இந்தியா-சீனா இடையே பாரம்பரியமாக பகை இருந்து வருவதால் திபெத் சுதந்திரத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். சீனா நமது எதிரியாகும். பாகிஸ்தான் மாதிரி அல்ல. பாகிஸ்தான் இந்தியாவுக்கு சேதத்தை விளைவிக்காது. பூட்டானை பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். நேபாளத்தின் மீதும் சீனா கண்வைத்துள்ளது. இந்திய சந்தையில் சீன பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு முலாயம் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து