முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு: மாதச்சம்பளம் மற்றும் படிகள் ரூ.1 லட்சமாக அதிகரிப்பு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 19 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, : தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்றும் படிகளை ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்த்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளார். முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் சபாநாயகரின் சம்பளமும் உயர்த்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்தும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வு குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த அறிவிப்புகள் வருமாறு:-

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பாண்டி அ.தி.மு.க உறுப்பினர்கள் முருகுமாறன், சக்திவேல் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் மற்றும் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களும் கோரிக்கை மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையிலே, இங்கே சம்பளம் உயர்த்த வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் வைத்திருக்கிறார்கள். அதைச் சார்ந்த அறிவிப்பை இங்கே வெளியிடுகின்றேன்.

சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம் 8,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர இதரப் படிகள் கீழ்க்கண்டவாறு உயர்த்தி வழங்கப்படும். ஈட்டுப்படி மாதம் ஒன்றுக்கு 7,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், தொலைபேசிப்படி மாதம் ஒன்றுக்கு 5,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும், தொகுதிப்படி மாதம் ஒன்றுக்கு 10,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், தொகுப்புப்படி மாதம் ஒன்றுக்கு 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், வாகனப்படி மாதம் ஒன்றுக்கு 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், தற்போது வழங்கப்படும் அஞ்சல்படி 2,500 ரூபாயாக தொடர்ந்து வழங்கப்படும். இதன் முலம், தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து 55,000 ரூபாய் என்பது மேற்கூறிய அறிவிப்புகளினால், 50,000 ரூபாய் உயர்ந்து இனி 1,05,000 ரூபாய் மாதந்தோறும் பெறுவார்கள்.

முதல்வர், அமைச்சர்கள், பேரவைத் தலைவர் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி 15,000 ரூபாயாகவும், சில்லரைச் செலவினப்படி 10,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 25,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். அதேபோன்று, பேரவைத் துணைத்தலைவர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி 15,000 ரூபாயாகவும், சில்லரைச் செலவினப்படி 7,500 ரூபாயாகவும், தொகுதிப்படி 25,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

ஓய்வு பெற்ற சட்டமன்றப் பேரவை - மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு 12,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியமும், சட்டமன்ற உறுப்பினர்கள் பெறுகின்ற ஓய்வூதியத்தின் 50 சதவிகிதம் என்கிற அடிப்படையில் 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வூதியம் பெறுகின்ற முன்னாள் சட்டமன்ற - மேலவை உறுப்பினர்களின் வயதினை கருத்தில் கொண்டு, மருத்துவ சிகிச்சைகளுக்கென வழங்கப்படும் தொகை ஆண்டிற்கு 12,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேற்கண்ட உயர்த்தப்பட்ட சம்பளம், ஓய்வூதியம் மற்றும் மற்றும் இதர படிகள் 1.7.2017 முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து