முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபருடனான மோதல் விவகாரம்: பிரான்ஸ் ராணுவத் தளபதி வில்லியர்ஸ் ராஜினாமா

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பாரீஸ் : ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதிபர் இமானுவல் மேக்ரானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி பியர்டே வில்லியர்ஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அனுமதிக்க மறுப்பு

பிரான்ஸில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதிதாக அதிபர் பொறுப்பை ஏற்ற இமானுவல் மேக்ரான், பாதுகாப்புப் படைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 6,248 கோடி குறைக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி பியர்டே வில்லியர்ஸ் கடந்த வாரம் நாடாளுமன்றக் குழுவிடம், ராணுவப் படைகளின் தலைவர்  என்ற முறையில், பாதுகாப்புக்கான நிதியில் 85 கோடி யூரோவைக் குறைக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறினார்.

கருத்து வேறுபாடுகள்

இதனால், அதிபர் மேக்ரானுக்கும் பியர்டே வில்லியர்ஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாயின. அதனைத் தொடர்ந்து, கடந்த வார இறுதியில் செய்தித் தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் இமானுவல் மேக்ரான், ''இங்கு நான்தான் உண்மையான தலைவன். என்னுடைய கருத்துக்கு இணங்க ராணுவ தலைமைத் தளபதிதான் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பதவி விலகல் அறிவிப்பு

நாட்டின் ராணுவ தலைமைத் தளபதியை அதிபர் மேக்ரான் அவமதித்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். எனினும், அதிபரின் முடிவுகளே இறுதியானது என மற்றொரு தரப்பினர் கூறினர்.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலகுவதாக பியர்டே வில்லியர்ஸ் அறிவித்துள்ளார். பதவியேற்று இரண்டு மாதங்களிலேயே நாட்டின் ராணுவத்தளபதியுடன் கருத்து மோதல் ஏற்பட்டது அதிபர் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து