முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து விலகிய மாயாவதியின் ராஜினாமா ஏற்பு

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து விலகிய மாயாவதியின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.

மாயாவதி பேச்சு ...

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சஹாரன்பூரில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட விவகாரம் குறித்து, டெல்லி மேல்-சபையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செவ்வாய் கிழமை பிரச்சினை எழுப்பி ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவர், தனது பேச்சை 3 நிமிடத்தில் முடித்துக் கொள்ள வேண்டும் என்று சபையின் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறினார்.

உரிமை இல்லை ...

உடனே மாயாவதி கொந்தளித்தார். அவர் குரியனை நோக்கி, “எனது சமூகத்தைப் பற்றிய பிரச்சினையை நான் எழுப்புகிறபோது எப்படி தடுக்கிறீர்கள்? நான் என் பேச்சை முடிக்கவில்லை. தலித்துகளுக்கு எதிராக அரங்கேற்றப்படுகிற வன்கொடுமைகளைப் பற்றி நான் பேச அனுமதிக்கப்படாதபோது, இந்த சபையில் இருக்கிற தார்மீக உரிமை எனக்கு இல்லை” என்றார்.

பதவியை ராஜினாமா ...

அப்போது குரியன், “இப்போது முழுமையான பேச்சு பேசாதீர்கள். விதி எண்.267-ன் கீழ் வேண்டுமானால், (ஒத்திவைப்பு தீர்மானம்) நோட்டீஸ் கொடுத்து, விவாதிக்க கோரலாம்” என குறிப்பிட்டார். ஆனால் மாயாவதி சமாதானம் அடையவில்லை. குரியன் தனது இருக்கையில் இருந்து எழுந்து, அவரை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் மாயாவதி, “நான் சபையில் இருந்து ராஜினாமா செய்யப்போகிறேன்” என்று கோபமாக கூறிவிட்டு வெளியேறினார். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவர் தான் சொல்லியபடியே மேல்-சபை எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். மேல்-சபையின் தலைவர் ஹமீது அன்சாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

ராஜினாமா கடிதம் ஏற்பு

மாயாவதியின் மேல்-சபை எம்.பி., பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முடிவுக்கு வர இருந்தது. மாயாவதி ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவருடைய ராஜினாமா கடிதம் ஏற்பு தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இப்போது மாயாவதியின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை சபாநாயகர், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து