முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு - பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வியாழக்கிழமை, 20 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜனாதிபதி தேர்தலில் 65 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை அடுத்து ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற மைய வளாகத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் நாட்டின் 14-வது புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். அவருக்கு, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பதவிபிராமணம் செய்து வைக்கிறார். புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

4,896 பேர் தகுதி

நாட்டின் 14-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர். பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் எம்.பி.க்களும், மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளில் அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டனர். 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் ஓட்டுப் போட தகுதி பெற்று இருந்தனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும்.

வாக்கு எண்ணிக்கை

பாராளுமன்றத்தில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில், பாராளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளும், அதன்பிறகு அகர வரிசைப்படி, மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருந்தார். மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 702044 வாக்குகளும், மீராகுமார் 367314 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீதமும், மீராகுமார் 34.35 சதவீதமும் பெற்றனர். 21 எம்.பிக்க்கள்  77 எம் எல்..ஏக்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

25-ம் தேதி பதவியேற்பு

இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25-ம் தேதி பாராளுமன்ற மையவளாகத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை ஹேகர் நீதிபதி அவருக்கு பதவிப்பிராமணம் செய்து வைக்கிறார்.

பிரதமர் - முதல்வர் வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்   உள்பட பல முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

2017 - ஜனாதிபதி தேர்தல்:

1) மொத்தம் வாக்குகள் - 10,98,882.

2) ராம்நாத் கோவிந்த் - 7,02,044 வாக்குகள் (65.65 சதவீதம்).

3) மீராகுமார் -  3,67,314 வாக்குகள் (34.35 சதவீதம்)

4) செல்லாத வாக்குகள் - 21 எம்.பிக்கள்  - 77 எம்.எல்.ஏக்கள்.

(ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு - 708).



இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து