மதுரையில் வீதி,வீதியாக சென்று மக்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குறைகளை கேட்டார்

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      மதுரை
mdu

மதுரை,-                மதுரையில் வீதி,வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குறைகளை கேட்டறிந்தார்.
            மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.90 மற்றும் 91  ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் அண்ணா முக்கிய வீதி, வீரகாளியம்மன் தெரு, ராமையா தெரு ஆகிய ஒவ்வொரு தெரு, தெருவாக சென்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.
          இதனை தொடர்ந்து ஜெய்ஹிந்துபுரத்தில் மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாளசாக்கடை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதருமாறு அமைச்சரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
           
              அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி வார்டு எண்.90 மற்றும் 91 பகுதிகளில் சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், சில பகுதிகளில் சாலைகள் பழுதாகி உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அந்த குறைகளை களையும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் குறைகள் தெரிவித்த பகுதிகளில் நேரடியாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக பெரியார் மற்றும் வைகையை நம்பியே உள்ளது. கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. எனவே சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வழியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளளப்பட்டு வருவதுடன்    4 நாட்களுக்கு ஒருமுறை குழாய்கள் மூலமும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தற்போது உள்ள குடிநீர் குழாய்கள் முன்னாள் முதலமைச்சர்  எம்.ஜி.ஆர்.  காலத்தில் நிறுவப்பட்டதாகும். தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாக மதுரை மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தற்பொழுது ரூ.1290 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையில் இருந்து நேரடியாக குழாய்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 125எம்.எல்.டி குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடிநீர் ஆவியாகுதல் உள்ளிட்ட குடிநீர் விரயம் ஏற்படாமல் முழுவதுமாக  பொது மக்களுக்கு விநியோகம் செய்ய முடியும். இத்திட்டமானது இரண்டு வருடங்களில் முடிக்கப்படும். தற்போது வரை 40 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய இத்திட்டத்தின் மூலம் நாள்ஒன்றுக்கு 125 எம்.எல்.டி குடிநீர் கொண்டு வர இருப்பதால் அடுத்த 60 ஆண்டுகளுக்கு மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாது. மேற்குத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் ஏதேனும் குறைகள் தெரிவித்தால் உடனுக்குடன் களையப்படுவதுடன் மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளும் தன்னிறைவு பெற்ற வார்டுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசானது மக்களின்  அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும், மக்கள் தெரிவிக்கும் குறைகளை களைவதிலும் முன்னோடிய அரசாக விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். என்றார்.
முன்னதாக வார்டு எண்.91 தென்னகரம் நேதாஜி தெரு. அண்ணா மெயின் தெரு, குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் வார்டு எண்.90 கண்ணன் தெரு. ராமையா தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், பொதுகுழாய் அமைக்குமாறு கோரிக்கை வைத்தனர். உடனடியாக பொதுகுழாய் அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். காமராஜர் காலனி 2வது தெரு, ராமையா தெரு, ஒவியர் தெரு ஆகிய தெருக்களில் பாதாள சாக்கடை பணி நடைபெற்றதால் பழுதான சாலைகளை உடனடியாக சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைக்குமாறும் உத்தரவிட்டார். என்.எஸ்.கே. தெரு, புலிபாண்டியன் தெரு, மருதுபாண்டியர் தெரு. தென்னகரம் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்குமாறும் உத்தரவிட்டார். 
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், உதவி ஆணையாளர்; கௌசலாம்பிகை, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர் (தெருவிளக்கு) செந்தில், தெற்கு வட்டாச்சியர்கள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து