முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையா நாயுடுவுக்கு 'அ.தி.மு.க அம்மா' ஆதரவு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வெங்கையா நாயுடுவுக்கு அ.தி.மு.க அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எம்.பி.க்களுடனான ஆலோசனைக்கு பிறகு இதை அவர் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் ஆக்ஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து துணை குடியரசு தலைவர் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து இருவரம் ஆதரவு திரட்டி வருகின்றனர். வெங்கையா நாயுடு கடந்த 18-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் கோரிக்கை

இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் 20-ம் தேதி நடைபெற்றது. ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரியிருந்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று, ஆதரவளிப்பதாக முதல்வர் எடப்பாடியும் தெரிவித்திருந்தார். அதன்படி ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களித்தனர். இதேபோல், துணை-ஜனாதிபதி தேர்தலிலும் ஆதரவளிக்கக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். அதற்கு முதல்வர் துணை-ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணி எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவளிப்பதாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து