முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் உலக கோப்பை 2-வது அரைஇறுதி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிக்குள் நுழைந்தது

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

டெர்பி, பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் 2-வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுரின் அதிரடி ஜாலத்தால் 281 ரன்கள் குவித்தது. பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை சிதறடித்தது. இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

42 ஓவர்களாக குறைப்பு

11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் டெர்பியில் நேற்று முன்தினம் நடந்த 2–வது அரைஇறுதியில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. பலத்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 3 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் 42 ஓவர் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் மிதாலிராஜ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. மந்தனா 6 ரன்னிலும், பூனம் ரவுத் 14 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இதன் பின்னர் கேப்டன் மிதாலிராஜிம், ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 101 ரன்களை எட்டிய போது மிதாலிராஜ் (36 ரன், 61 பந்து, 2 பவுண்டரி), பீம்சின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார்.

ஹர்மன்பிரீத் கவுர் சதம்

இதைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுருடன் தீப்தி ‌ஷர்மா ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ஹர்மன்பிரீத் கவுர் அதன் பிறகு அதிரடியில் இறங்கினார். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த அவர் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 98 ரன்னில் இருந்த போது 2–வது ரன்னுக்கு எதிர்முனையில் நின்ற தீப்தி ‌ஷர்மா தயக்கம் காட்டிய பிறகே ஓடி வந்தார். இதனால் ஹர்மன்பிரீத் கவுர், பாய்ந்து விழுந்து ரன்–அவுட்டில் இருந்து தப்பித்து தான் சதத்தை எட்டினார். சதம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் கோபத்தில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து விட்டார். சில வினாடிக்கு பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேட் செய்தார்.

3-வது சதம் ...

90 பந்துகளில் தனது 3–வது சதத்தை பூர்த்தி செய்த ஹர்மன்பிரீத்கவுர் லேசான தசைப்பிடிப்பாலும் அவதிப்பட்டார். ஆனாலும் அவரது சரவெடி ஆட்டம் மட்டும் தணியவில்லை. கார்ட்னெரின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விரட்டியடித்து மிரள வைத்தார். அடுத்த 17 பந்துகளை சந்திப்பதற்குள் மேற்கொண்டு 50 ரன்கள் திரட்டி விட்டார். ரன்ரேட்டும் 6 ரன்களுக்கு மேலாக பறந்தது. மறுமுனையில் தீப்தி ‌ஷர்மா தனது பங்குக்கு 25 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதே சமயம் சிக்சர் மழையுடன் ஹர்மன்பிரீத் கவுர் நடத்திய ருத்ரதாண்டவத்தை கடைசி வரை ஒன்றும் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் நொந்து போனார்கள்.

281 ரன்கள் குவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் 171 ரன்களுடனும் (115 பந்து, 20 பவுண்டரி, 7 சிக்சர்), வேதா கிருஷ்ணமூர்த்தி 16 ரன்னுடனும் (2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். கடைசி 12 ஓவர்களில் மட்டும் நமது வீராங்கனைகள் 149 ரன்களை சேகரித்தனர். அடுத்து 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. 9 ஓவர் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுக்கு 25 ரன்னுடன் தடுமாறியது. பின்னர் இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்தவீச்சில் தாக்குபிடிக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி. நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஹர்மன்பிரீத் கவுர் சாதனை

பஞ்சாப்பை சேர்ந்த 27 வயதான ஹர்மன்பிரீத் கவுர், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 பவுண்டரி, 7 சிக்சருடன் 171 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார். பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்திய வீராங்கனையின் 2–வது அதிகபட்சம் இதுவாகும். தீப்தி ‌ஷர்மா கடந்த மே மாதம் அயர்லாந்துக்கு எதிராக 188 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

அதே சமயம் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் 4–வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. உலக கோப்பையில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கும் ஹர்மன்பிரீத் கவுர் சொந்தக்காரர் ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து