முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் பெய்ஜிங் பயணம் பதட்டத்தை தணிக்க உதவும்: சீனா நிபுணர் கருத்து

சனிக்கிழமை, 22 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பெய்ஜிங் வருகை தர இருப்பது இந்தியா-சீனா இடையே பதட்டத்தை தணிக்க உதவும் என்று சீன நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சீனா, ரஷ்யா, பிரேசில் தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் கலந்துகொள்கிறார். அப்போது சீனா உள்பட இதர 4 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை தோவல் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பானது இந்தியா-சீனா இடையே டோக்லம் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலை தவிர்க்க உதவும் என்று சீன நாட்டு ஆய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த 5 நாடுகளின் உச்சிமாநாடு வருகிற செப்டம்பர் மாதம் சீனாவில் உள்ள சியாமன் நகரில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவு செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு சீனா நாட்டு பாதுகாப்பு ஆலோசகரும் மாகாண கவுன்சிலருமான யாங் ஜிச்சி  ஏற்பாடு செய்துள்ளார்.

பெய்ஜிங் நகருக்கு தோவல் வருவது இந்தியா-சீனா இடையே பதட்டத்தை தணிக்க ஒரு வாய்ப்பாக அமையும்  என்று சீன சீர்திருத்த அமைப்பில் உள்ள நிபுணர் மா ஜியாலி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸில் ஜியாலியின் கருத்து ஒரு சிறு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. டோக்லம் பிரச்சினையால் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கை கண்டபடி செய்தி வெளியிட்டு பெரியதாக்கியது இந்த பத்திரிகைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லைப்பிரச்சினைக்கு தீர்வுகாண இருநாடுகள் சிறப்பு பிரதிநிதிகளாக தோவலும் யாங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 19 முறை சந்தித்து பேசி உள்ளனர். சிக்கிம் பகுதியில் டோக்லம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண யாங்கும் தோவலும் முறைப்படி பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என்று சீன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தோவலுடன் மா ஜியாலி சந்தித்து பேசும்போது சீன தரப்பில் புகார் கூறலாம். இதற்கு பதிலாக இந்திய தரப்பில் சில பேரங்கள் குறித்து தோவல் கூறலாம். இது இருதரப்பினர்களிடையே பதட்டத்தை தணிக்க உதவும் என்று நிபுணர் மா ஜியாலி தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் இரண்டு நாடுகளிடையே உள்ள உறவு பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் மா ஜியாலி கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து