முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி அமாவாசையை முன்னிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்த மக்கள் - மதுரை கோயில்களில் அலைமோதிய கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

மதுரை : ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களுக்குச் சென்று பொதுமக்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், அம்பிகையை வழிபடுவதற்கும் உகந்த நாளாகத் திகழ்கிறது. ஆடி அமாவாசையான நேற்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, தானங்கள் அளித்தால் வாழ்வில் வளம் பெருகும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் கோயில்களுக்கு படையெடுத்துச் சென்று தர்ப்பணம் கொடுத்தனர்.

மனித உடல் இறந்த பின்பும், ஆன்மாவிற்கு அழிவு கிடையாது என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவங்களில் ஒன்றாகும். நாம் இந்தப் பிறவியில் செய்யும் புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப, பித்ரு லோகத்தில் இடம் கிடைக்கும் என்றும், பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம், ஆன்மாவின் பசி, தாகத்தை தீர்த்து வைப்பதாகவும், இதனால் அவர்களின் குலம் தழைத்தோங்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்காக, மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களிலும், தட்சிணாயனம், உத்திராயணம், ஆகிய புண்ணிய காலங்களிலும் புனித நீராடி, வழிபாடு செய்வதென்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

ஆடி அமாவாசை அன்று, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, ஸ்ரீரங்கம் அம்மா படித்துறை, காவிரி ஆற்றங்கரை, பூம்புகார் கடலுடன் கலக்கும் சங்கமுக தீர்த்தம், வேதாரண்யம் சன்னதி கடல், கோடியக்கரை சித்தர் கட்டம், தேவிபட்டினம் கடற்கரை, உள்ளிட்ட புண்ணிய இடங்களில், புனித நீராடி, தானங்கள் அளித்து, சிவாலயங்களில் வழிபாடு செய்தால், 7தலைமுறை மூதாதையர்களுக்கு செய்த புண்ணிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இதன் மூலம் ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷங்கள் நீங்கும் என்றும், புனித நீராடி சிவாலயங்களில் வழிபாடு செய்து, தானங்கள் அளித்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நேற்று மேற்கண்ட கோயில்கள் மற்றும் இடங்களுக்குச் சென்று தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மணிக்கணக்கில் காத்திருந்து தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பிறகு சிவபெருமானை வழிபட்டனர். மதுரை வைகை ஆற்றில் பேச்சியம்மன் படித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல மீனாட்சி அம்மன் கோயில், திருப்புவனம், ராமேஸ்வரம், திருவரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்களிலும் தர்ப்பணம் கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து