முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு 4 ஆண்டுகள் தொடரும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சேலம் : தமிழத்தில் தற்போது நடைபெற்று வரும் எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு 4 ஆண்டுகள் தொடரும் என சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.

திட்டப்பணிகள்:

எடப்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் நேற்று மதியம் நடைபெற்ற அரசு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சம்பத் தலைமை வகித்தார். எம்.பி. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்தவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பிறகு ரூ1கோடியே 60 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இதையடுத்து. 1306 பயனாளிகளுக்கு ரூ.19.18 கோடியே மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:

எடப்பாடி தொகுதியில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.20 கோடி மதிப்பிலான திட்டத்தை வழங்கினார்.

நான் அமைச்சராக இருந்த போது வாரம் தோறும் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுவந்தேன். தற்போது முதல்வராகிவிட்டதால் 234 தொகுதி மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய திட்டங்களை வகுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் முன்பு போல் எடப்பாடிக்கு வரமுடியவில்லை. இருப்பினும் பலர் சென்னையில் வந்து கோரிக்கை மனு கொடுக்கின்றனர். அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

எப்போதும் சந்திக்கலாம்:

நான் எம்.எல்.ஏ. யாக இருந்த போதும், அமைச்சராக இருந்த போதும் எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படியே இருக்கின்றேன். என்னை எப்போதும் சந்திக்கலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 மணிக்கு மேல் நான் பொதுமக்களை சந்திக்கிறேன்.

2011ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. தற்போது நங்கவல்லி ஓன்றியத்தில் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் அப்பகுதி மக்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதேபோல் மேச்சேரி ஒன்றிய மக்களும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேட்டனர். இந்த இரண்டு ஒன்றிய மக்களுக்கும் ரூ.158 கோடியில் கூட்டு குடிநீர் செயல்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் வழங்கப்படும்.

எடப்பாடியில் ரூ.4 கோடியில் மருத்துவமனை, பாலம், கவுண்டப்பட்டி வெள்ளாண்டி வலசு பாலம் திறக்கப்பட்டுள்ளது. சரபங்கா ஆற்றின் குறுக்கே ரூ.1.65 கோடியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி மக்களுக்காக அரசு கல்லூரி கொண்டுவரப்பட்டது. 1500 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நங்கவல்லி புதிய பாலிடெக்னிக் அடுத்த ஆண்டு அமைய உள்ளது. எட்டிகுட்டைமேடு அடுத்த ஆண்டு பி.எட் கல்லூரி துவங்கப்பட உள்ளது. இதேபோல் கோனேரிப்பட்டியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கட்சிபள்ளி, பெரியசூரகை, பக்கநாடு ஆகிய ஊர்களில் கால்நடை மருத்துமனை அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகில் திருமண மண்டபம் அமைக்கப்பட்ட உள்ளது கோவிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முருகன் கோவில் கட்டப்பட உள்ளது. சரபங்கா ஆற்று குறுக்கே 6 கோடி செலவில் இரண்டு தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் போது கிழக்கு கால்வாயில் ஏற்படும் நீர் கசிவால் தண்ணீர் விவசாயத்திற்காக கடைமடை பகுதிக்கு சென்று அடைவதில்லை. தண்ணீர் திறக்கும் போது ஏற்படும் கசிவை அடைக்க கடந்த ஆண்டு அம்மா ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்தார். இந்த ஆண்டு ரூ.49 கோடி ஒதுக்கீடு செய்து கிழக்கு கால்வாய் முழவதும் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் எடப்பாடியில் மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.

தூர்வாரும் பணி:

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்க ஆறு ஏரிகளை தூர்வாரி அதில் உள்ள வண்டல் மண் படிவுகளை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ரூ.100 கோடியில் முதல் கட்டமாக 1019 ஏரிகளும் இரண்டாம் கட்டமாக ரூ.300 கோடியில் 2065 ஏரிகள் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டபேரவையில் அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி வருகிறோம். தமிழகம் சுகாதார துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நான் முதல்வராக வந்தபோது இந்த ஆட்சி விரைவில் கலைந்துவிடும் என்று சொன்னார்கள். எனது தலைமையிலான் அரசு 4 ஆண்டுகள் தொடரும். அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்னிடம் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை. கல்வி துறையில் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. 140 ஆண்டுகள் இல்லாத அளவில் வறட்சியில் தமிழகம் இருந்த போதும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். இது உங்கள் ஆட்சி மக்களுக்கு தேவையானதை செய்யும் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் எம்.எல்.ஏக்கள் ஜி.வெங்கடாசலம், சக்திவேல், ராஜா, வெற்றிவேல், மனோன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து