முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்: டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங்கை டெல்லியில் மீண்டும் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விலக்களிக்க வேண்டும்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வரும் வகையில் மத்திய அரசு நீட் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது.  தமிழகத்தில் மாநில கல்விப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 4.2 லட்சம் பேர், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 4,678 பேர்.  இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்விற்கு விலக்களிக்க வேண்டி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. 

அமைச்சர்கள் குழு

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சட்டசபையில், புதுடெல்லிக்கு நேரடியாக சென்று மத்திய அரசுக்கு நீட் தேர்வு தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அனுமதியோடு 5 அமைச்சர்கள் கொண்ட குழு கடந்த 20-ம் தேதி அன்று புதுடெல்லிக்கு சென்று பாரதப் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பொன்.ராதாகிருஷ்ணனுடன் ...

இதன் தொடர்ச்சியாக நேற்று நீட் தேர்வில் விலக்களிப்பது தொடர்பாக மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக புதுடெல்லி சென்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய 6 அமைச்சர்கள் குழு, புதுடெல்லி டிரான்ஸ்போர்ட் பவனில் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.  இச்சந்திப்பின்போது தமிழகத்திற்கு நீட் தேர்வு தொடர்பாக, சம்மந்தப்பட்ட துறைகளுக்கு தானும் இணைந்து அழுத்தம் கொடுப்பதாக அமைச்சர்கள் குழுவிடம் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

ராஜ்நாத்சிங்குடன்...

இதனை அடுத்து மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் குழு, புதுடெல்லி, அக்பர் சாலை எண்.17-ல் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்திற்கு நேரில் சென்று, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தனர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சரும், தமிழகத்தின் கோரிக்கையினை சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

அருண்ஜெட்லியுடன்...

மேலும், அமைச்சர்கள் குழு பாராளுமன்ற வளாக அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.  இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவிடம் எடுத்து கூறுவதாக அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்புகளின்போது அமைச்சர்கள் குழுவுடன் புதுடெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சட்டத்துறை அரசு செயலாளர் எஸ்.எஸ்.பூவலிங்கம் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து