முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் 14-வது புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவிஏற்பு - விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி டெல்லி சென்றார்

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாட்டின் 14-வது புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்க்கவுள்ளார். ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

14-வது ஜனாதிபதியாக ....

புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்கிறார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக முதல்வர் எடப்பாடி நேற்று மதியம் 3 மணியளவில் சென்னையிலிருன்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

பதவியேற்பு விழா

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 17-ம் தேதி தேர்தல்  நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 65.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையொட்டி அவர் இன்று ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள்  ஜனாதிபதி மாளிகையில் மிகப்பிரமாண்டமான அளவில் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதிக்கு பதவி ஏற்பு விழாவில் கொடுக்க வேண்டிய அணிவகுப்பு மரியாதை ஒத்திகை பலமுறை நடந்தது.

தலைவர்கள் பங்கேற்பு

ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த பதவி ஏற்பு விழாவில் முக்கிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமீத்ஷா, கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா மற்றும் ராஜ்யசபை காங்கிரஸ் தலைவர்  குலாம் நபி ஆசாத் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.   

பிரிவு உபச்சார விழா

முன்னதாக ஓய்வுபெறும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிக்கு டெல்லியில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமா் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி நினைவு பரிசு ஒன்றை வழங்கினார். அதை பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து