முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினருக்கான “டாம்கோ லோன் மேளா” கடன்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ், துவக்கி வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

  மதுரை -மதுரை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள ஜான் பென்னி குயிக் மக்கள் குறை தீர்க்கும் அரங்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கான “டாம்கோ லோன் மேளா” கடன்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,   துவக்கி வைத்தார்.
  இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
  தமிழகஅரசு சிறுபான்மையின மக்களின் சமூகம், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்திடும் சீரிய நோக்கில் சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
  பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கான அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு தமிழகஅரசால் வழங்கப்பட்டு வருகிறது.  மதுரை மாவட்டத்தில் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்தவர்கள் (இஸ்லாமியர், கிருத்துவர், புத்த மதத்தினர், பாரசியர் மற்றும் சீக்கியர்கள்) சுயமாக தொழில் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவித்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
 மேலும் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கவும் மற்றும் அவர்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடையவும், பாரதப்பிரதமரின் புதிய 15 அம்ச திட்டங்கள் பற்றி அறிவுறுத்தியும், சகோதரத்துவ நிலையில் நடப்பது பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக சிறுபான்மையினர் நல உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 
  அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, ஆராய்ச்சிப்படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களை தமிழகஅரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் 10492 மாணவ, மாணவியர்கள் பயனடைந்தள்ளனர்.  இந்த வருடம் 16633 மாணவ, மாணவியர்கள் பயனடைய உள்ளனர்.
  மதுரை மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக எவ்வித கட்டணமுமின்றி உணவு மற்றும் உறைவிட வசதியுடன் மதுரை கீழவாசல் என்.எம்.எஸ்.எம். மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறுபான்மையினர் மாணவியர் விடுதி 60 மாணவியர்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  மேற்படி விடுதியில் தங்கிப் பயின்று மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவியர்க்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.
  மாணவ, மாணவியரிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழை முதன்மைப்பாடமாக பயின்று முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் இடங்களைப் பெறும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு ரூ.30000 - மாவட்ட அளவில் பரிசுத்தொகைகள் வழங்கப்படுகிறது.
 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லீம் மகளிர் உதவிச் சங்கம் என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  மதுரையில் இச்சங்கத்தின் மூலம் இதுவரை 346 பயனாளிகளுக்கு ரூ.11,81,155க்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய சங்கத்தில் 457 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  இதுவரை 143 பயனாளிகளுக்கு ரூ.3,32,940க்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பிரிவினரும் புனிதப்பயணமாக ஜெருசலேம் செல்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 500 பயனாளிகளுக்கு தலா ரூ.20000 வீதம் நிதியுதவிகள் வழங்க உத்தரவுகள் வழங்கப்பட்டு 2011ம் ஆண்டிற்கு ரூ.1 கோடி வீதம் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் இதுவரை 1968 கிறிஸ்துவர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 மாநில அரசு மற்றும் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் நிதியுதவி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை டாம்கோ கழகம் தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறி பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது.  இந்த நிதியாண்டில் மதுரை மாவட்டத்திற்கு ரூ.3 கோடி கடன் வழங்க டாம்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இத்திட்டத்தின் கிழ் தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
 மேற்படி திட்டங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் சான்று, குடும்ப அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கை மற்றும் வங்கி கோரும் பிற ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ அல்லது இணைப்பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்கள் அலுவலகத்திலோ அல்லது மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
 இச்சிறப்பு விழிப்புணர்வு முகாமில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், துணைப்பதிவாளர்கள் அமிரதா (மதுரை சரகம்), பார்த்திபன் (உசிலம்பட்டி சரகம்) அமுதா (மத்தியக் கூட்டுறவு வங்கி), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொ) கண்ணகி, தனி வட்டாட்சியர் சித்ரா, கண்காணிப்பாளர் ஆனந்தி, சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து