முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார் - பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் நேற்று பாரம்பரிய முறையில், பாராளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற வண்ணமிகு பதவியேற்பு விழாவில் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நாட்டின் தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார்.

ஜனாதிபதி தேர்தல்

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் (24-ம் தேதி) முடிவடைந்தது. முன்னதாக, நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவிக்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏகமனதாக ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முயற்சியை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா முயற்சிகளை மேற்கொண்டது. இதில் கருத்தொற்றுமை ஏற்படாததால் ஜனாதிபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக முன்னாள் லோக்சபை சபாநாயகர் மீரா குமார் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் கவர்னாராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி எதிர்பார்கப்பட்ட நிலையில், தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. முடிவு கடந்த 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றிப்பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட மீராகுமார் 34.35 சதவீத வாக்குகள் பெற்றார்.

அணிவகுப்பு மரியாதை

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையொட்டி மறுநாள் (நேற்று)  புதியதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான விழா பாரம்பரியத்துடன் மிகப்பிரமாண்டமாக, வண்ணமிகு வகையில், பாராளுமன்ற மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பதவியேற்பு விழாவுக்கு முன், டெல்லி அக்பர் சாலை 10-ம் நம்பர் பங்களாவில் இருந்த 71 வயதாகும் ராம்நாத் கோவிந்த்தையும், அவரது துணைவியார் சவிதாவையும் ஜனாதிபதிக்கான ராணுவ செயலாளர் அனில் கோசலா, முறைப்படி ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து வந்தார். ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்த்தை வரவேற்பதற்காக பிரணாப் முகர்ஜி தயாராக இருந்தார். பின்னர் இருவரும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தனர். அங்கு பிரணாப் முகர்ஜிக்கு கடைசியாக அவரது பாதுகாவலர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். மேடையில் பிரணாப் முகர்ஜியின் இடதுபக்கம் ராம்நாத் கோவிந்த் நின்றிருந்தார்.

ராம்நாத்துக்கு வரவேற்பு ...

பின்னர் கறுப்புநிற காரில் இருவரும் பாராளுமன்றத்தில் உள்ள மைய வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். காரில் ராம்நாத் கோவிந்த் வலது பக்கமாகவும், பிரணாப் முகர்ஜி இடதுபக்கமாகவும் அமர்ந்து சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ஜனாதிபதி பாதுகாவலர்கள் அலங்காரம் செய்யப்பட்ட  வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தும், நீலநிறத்தில் தலைப்பாகை அணிந்தும் சென்றனர். ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுன்றம் வரை செல்லும் சாலையில் பாதுகாப்பு பணியில் முப்படைகளையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த ஊர்வலம் பாராளுமன்றத்தின் 5-வது வாயில் வரை நடந்தது. 5-வது நுழைவாயிலில் நின்றிருந்த துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, லோக்சபை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹேகர் ஆகியோர் பிரணாப் முகர்ஜியையும், ராம்நாத் கோவிந்த்தையும் வரவேற்றனர். பின்னர் அவர்கள் இருவரையும் பாராளுமன்ற மைய வளாகத்திற்கு அழைத்துச்சென்றனர்.

ஜனாதிபதியாக பதவியேற்பு ...

பின் பாராளுமன்ற மைய வளாகத்தில் நடைப்பெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவிஏற்றார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ராம்நாத் கோவிந்த் இந்தி மொழியில் பதவி ஏற்றுக்கொண்டார். நாட்டின் அரசியல் சட்டத்தை பராமரித்தும், பாதுகாத்தும் அரசியல் சாசனம் மற்றும் சட்டப்படி நடந்துகொள்வேன் என்று ராம்நாத் கோவிந்த் உறுதி அளித்தார். ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றவுடன் அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்கின. 

தலைவர்கள் பங்கேற்பு

பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி உள்பட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ஆளும் பா.ஜ. கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்யா நாயுடு, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆந்திரா, பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டர்.

பொறுப்பேற்பு

பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் விழாவில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கட்சி வேறுபாடின்றி வணக்கம் தெரிவித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார். ஒரு சில தலைவர்களுடன் வணக்கம் தெரிவித்து கையும் குலுக்கிக்கொண்டார். மேலும் ஒரு சில தலைவர்களிடம் இரண்டு கைகளால் வணக்கம் மட்டும் தெரிவித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார். பின்னர் பாராளுமன்ற மையமண்டபத்தில் கறுப்பு நிற காரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் சென்றனர். இந்தத்தடவை பிரணாப் முகர்ஜி வலது பக்கமும், ராம்நாத் கோவிந்த் இடது பக்கமும் அமர்ந்து சென்றனர். அப்போது வானமும் வரவேற்கும் விதத்தில் மழை பொழிந்தது. ஜனாதிபதி பாதுகாவலர்கள் அணிவகுத்து செல்ல கார் பின் சென்றது. மழை சாலையை சுத்தம் செய்வதுபோல் இருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு சென்றதும் ராம்நாத் கோவிந்த் கையெழுத்து போட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

முதல் குடிமகனாக ...

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் பிறந்த ராம்நாத் கோவிந்த் பி.காம் பட்டதாரி. பின்னர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ள இவர் சிறந்த சட்ட நிபுணர் ஆவார். பீகார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட அவர், தற்போது நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்துள்ளார். புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து