முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி - கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

சென்னை : தேசபக்தி பாடலான வந்தே மாதரம் பாடலை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் மனு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் பங்கேற்ற வீரமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளுக்கான ‘டி’ டைப் வினாத்தாளில் கேள்வி எண் 107-ல் வந்தே மாதரம் என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால் கீ-ஆன்சரில் சமஸ்கிருதம் என உள்ளது.அனைத்து பாடப் புத்தகங்களிலும் வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்று தான் உள்ளது. இதனால் இந்த தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவனாக அறிவிக்க வேண்டும். அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

ஆதாரங்களுடன் ...

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன், இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வக்கீல்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்த பாடல் எந்த மொழியில் பாடப்பட்டது? என்பதற்கு ஆதாரங்களுடன், இந்த ஐகோர்ட்டுக்கு உதவலாம் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆஜராகி, ‘வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல்’ என்று விளக்கம் அளித்தார். ஐகோர்ட்டு வக்கீல்கள் சுஜாதா, ஏ.பிலால், அண்ணாத்துரை ஆகியோர் இது சமஸ்கிருத பாடல் அல்ல. வங்கமொழியில் எழுதப்பட்ட பாடல் என்று ஆதாரங்களுடன் வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முரளிதரன் நேற்று காலையில் தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

ஆவணங்கள் தாக்கல்

வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது? என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி பொது மக்களுக்கும், வக்கீல்களுக்கும் இந்த ஐகோர்ட்டு கோரிக்கை விடுத்தது. இதன்படி, வக்கீல்கள் சுஜாதா, ஏ.பிலால், அண்ணாத்துரை ஆகியோர் ஆஜராகி, வங்க மொழியில் தான் பாடல் பாடப்பட்டது என்று ஆதாரங்களுடன் கூறி, வாதிட்டார்கள். அதில், வக்கீல் சுஜாதா, மேற்கு வங்கத்துக்கு நேரடியாக சென்று, வந்தே மாதரம் பாடலை பாடிய பக்கிம் சந்திர சட்டோபாத்தியாயாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் இருந்து ஆவணங்களை வாங்கி வந்து, இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

இளைய தலைமுறை ...

அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், வந்தே மாதரம் பாடல், வங்க மொழியில் எழுதப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக வக்கீல் சுஜாதாவை இந்த ஐகோர்ட்டு பாராட்டுகிறது. வந்தே மாதரம் பாடல், 1882-ம் ஆண்டு பக்கிம் சந்திர சட்டோபாத்தியாயா எழுதிய ஆனந்தமடம் என்ற நாவலில் முதலில் இடம் பெற்றது. தேசபக்தி பாடலான இந்த பாடல், அந்த காலக்கட்டத்தில் மக்களிடையே விடுதலை உணர்வையும், தேசபக்தியையும் ஏற்படுத்தியது.நாட்டின் விடுதலைக்காக பல தலைவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்களது தியாகம் இளைய தலைமுறையினருக்கு தெரியவேண்டும்.

சுப்ரீம்கோர்ட் உத்தரவு

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால், இளைய சமுதாயத்தினர் நேரம் கிடைக்காமல், எந்நேரமும் பரபரப்புடன் சுற்றி வருகின்றனர். எனவே, நாட்டிற்காக ரத்தம் சிந்திய தலைவர்கள் குறித்தும், தேசப்பற்று குறித்தும் இளையதலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும்.ஏற்கனவே ஒரு வழக்கில், திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதம் பாடல் ஒலிப்பரப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், பள்ளிப்பாடத்தில் திருக்குறளை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல, தேசபக்தி பாடலான வந்தே மாதரம் பாடலை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக ஒலிப்பரவேண்டும். மாணவர்கள் அந்த பாடலை பாட வேண்டும். அதேபோல, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளில் மாதம் ஒரு முறை இந்த தேசபக்தி பாடலை பாடவேண்டும். இதுதொடர்பாக சுற்றறிக்கையை தலைமை செயலாளர், 4 வாரத்துக்குள் பிறப்பித்து, அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.

ஆசிரியர் பணி ...

வந்தே மாதரம் பாடல் வங்கமொழியில் பாடப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.மேலும், இந்த ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டாலும், 0.17 மதிப்பெண் அவருக்கு குறைவாக இருப்பதாகவும், அதனால் ஆசிரியர் பதவி வழங்கப்படாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்க முடியாது. அந்த 0.17 மதிப்பெண்ணை மனுதாரருக்கு வழங்கி, அவர் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவராக அறிவிக்க வேண்டும். இதன்பின்னர், 4 வாரத்துக்குள் மனுதாரருக்கு ஆசிரியர் பணியை தமிழக அரசு வழங்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி முரளிதரன் உத்தரவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து