முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் ரூ.16.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 26 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடத்தில் ரூ.16.5 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தினை அவரின், 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

புதிய மணிமண்டபம்

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உடல் ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மத்திய அரசின் சார்பில் ரூ.16 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் இரவு பகலாக கட்டி முடிக்கப்பட்டு தற்போது திறப்பு விழாவிற்காக தயராக உள்ளது. அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று புதிய மணிமண்டபம் திறப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திரமோடி நேரில் கலந்து கொண்டு மணிமண்டபத்தினை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

பிரதமர் திறந்து வைக்கிறார்

இதற்காக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்திறங்குகிறார். அங்கிருந்து காரில் மணிமண்டபம் அமைந்துள்ள இடத்திற்கு செல்லும் பிரதமர் மோடி காலை 11.30 மணியளவில் அப்துல்கலாமின் மணிமண்டபத்தினை திறந்து வைத்து பார்வையிடுகிறார். அவருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய வர்த்தகம் மற்றம் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை-ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வெங்கையாநாயுடு, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா கலந்து கொள்கின்றனர். மேலும், மணிமண்டப திறப்பு விழாவில் கலாமின் குடும்பத்தினர் விழாவில் கலந்து கொள்கின்றனர். அப்துல்கலாம் மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறக்கும் போது ‘கலாம் பாடல்’ பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கலாம் சலாம்” என்று பெயர் சூட்டப் பட்டுள்ள இந்த பாடல் மூன்று நிமிடங்கள் பாடக் கூடியதாகும். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய அந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

பிரமாண்டமான கண்காட்சி

விழாவையொட்டி மணிமண்டபத்தில் அப்துல்கலாமின் நினைவையும், அவரின் வாழ்நாள் நிகழ்வையும் நினைவு கூறும் வகையில், பிரமாண்டமான கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் அப்துல்கலாமின் மெழுகுசிலை அமைக்கப்பட்டுள்ளதோடு, அவரி்ன் வாழ்க்கை முறைகளை ஓவியங்களாகவும், சிலைகளாகவும், அவரின் சாதனைகளையும் சித்தரித்து வைத்துள்ளனர். இதுதவிர, மணிமண்டபத்தில் காண்பவரை கவரும் வகையில் 70 வகையான செடிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் வளர்க்கப்பட்டுள்ளதோடு, பச்சை பட்டு போர்த்தியதை போன்று புல்தரையும் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவு சாலை....

இந்த எழில்மிகு மணிமண்டபத்தினை பார்வையிடும் பிரதமர் நரேந்திரமோடி இதனை தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், கலாமின் கனவான விஷன்-2020 விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் இடமான இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு வளாகத்திற்கு வரும் பிரதமர் மோடி 12.30 மணியளவில் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில், ரூ.9 கோடியே 50 லட்சம் செலவில் புயலால் அழிந்து புனரமைக்கப்பட்டுள்ள தனுஷ்கோடி புதிய சாலையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்து வைக்கும் பிரதமர் மோடி இந்துகளின் புண்ணிய தலங்களான ராமேசுவரத்தையும், அயோத்தியாவையும் இணைக்கும் வகையில் புதிய விரைவு ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் பசுமை ராமேசுவரம் திட்டம்

மேலும், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடிப்பு மீனவர்களுக்கு அதற்கான அனுமதி கடிதங்களை வழங்கும் பிரதமர் பசுமை ராமேசுவரம் திட்டம் முன்வடிவை வெளியிடுகிறார். மேலும், புண்ணிய தலமான ராமேசுவரம் தீவினை ஆன்மீக சுற்றுலா தலமாக அறிவித்து ராமபிரான் வந்து வழிபட்டு சென்ற தலங்களான உப்பூர், ராமேசுவரம், திருப்புல்லாணி, தேவிபட்டிணம் ஆகிய தலங்களை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்தினை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில், மத்திய-மாநில அமைச்சர்களும், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும், கவர்னர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விழாவின் முடிவில் கார் மூலம் செல்லும் பிரதமர் நரேந்திரமோடி மண்டபத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்து தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி ராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5 அடுக்கு பாதுகாப்பு ...

பிரதமரின் தனிபிரிவு பாதுகாப்பு படையினர், சிறப்பு பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு பாதுகாப்பு படையினர், ஆயுதப்படையினர், உள்ளுர் போலிசார் என 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, விழா நடைபெறும் பகுதி முழுவதும் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு ராமேசுவரம் தீவு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் ஆயுதம் தாங்கி நின்று வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். கடலோர பகுதி முழுவதும் சீருடை அணியாத போலீசார் தீவிர ரோந்து சுற்றி அன்னியர் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, கடல்பகுதியில் கடற்கரை ஓரம் கடலோர காவல்குழும போலீசாரும், அதன்பின்னர் இந்திய கடலோர காவல்படையினரும், அதன்பின்னர் இந்திய கடல் எல்லை வரையிலும் கடற்படையினரும் ரோந்து கப்பல்களில் ரோந்து சுற்றி கடல் பகுதி முழுவதையும் பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்துள்ளனர். பிரதமர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து