முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா மாநில சிறையிலிருந்து தப்பிய இரு கைதிகள் கடத்தி வந்த கார் திருமங்கலம் அருகே கண்டுபிடிப்பு: போலீசார் தீவிர தேடுதல் வேட்டை:

புதன்கிழமை, 26 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் சிறையிலிருந்து தப்பிய இரு கைதிகள் அங்கிருந்து கடத்தி வந்த கார் திருமங்கலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபல ரவுடிகளான அந்த இரண்டு கைதிகளையும் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம அருகேயுள்ள சிவரக்கோட்டை கிராமத்திலிருந்து சிவரக்கோட்டை செல்லும் சாலையில் பழையபாலம் பகுதியில் முன் கண்ணாடி நொறுங்கிய நிலையில் நம்பர் பிளேட்டுகளின்றி சொகுசு காரொன்று நிற்பதாக கள்ளிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அனாதையாக நின்றிருந்த அந்த காரை சோதனையிட்டனர்.அப்போது காரினுள் மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட இரண்டு நம்பர் பிளேட்டுகளும்,செக் புத்தகமும்,பாஸ்போர்ட் படங்களும் கிடைத்தது.இந்த தடயங்களை வைத்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்து.
அதனடிப்படையில் கடந்த 23ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியிலிருக்கும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டேவிட்முருகேஷ்(எ)தேவேந்திரன்(25),மணிகாந்த்(எ)மணிகண்டன்நாடார்(24)ஆகிய இருகைதிகள் பாதுகாப்பு அம்சங்களை அலட்சியம் செய்துவிட்டு ஜெயிலின் உயரமான சுவரில் கயிறு போட்டு ஏறி தப்பியுள்ளனர்.பின்னர் அங்கு டூவீலரில் செல்போன் பேசியபடி நின்று கொண்டிருந்த நபரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த டூவீலரில் ஏறி அங்கிருந்து தப்பியுள்ளனர்.இதையடுத்து கடாக்படா பகுதியில் கார்களை பழுது பார்க்கும் நிறுவனம் வைத்துள்ள ராஜூரெட்டி என்பரை தலையில் தாக்கி படுகாயப்படுத்தி விட்டுஅங்கிருந்த ஸ்கோடா காரை எடுத்துக் கொண்டு கைதிகள் இருவரும் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடாக்படா காவல்நிலையத்தில் ராஜூரெட்டி புகார் செய்ததன் பேரிலும்,கல்யாண் சிறையின் நிர்வாக காவல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரிலும் அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கள்ளிக்குடி போலீசார் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் அங்கிருந்து கடத்தி வந்த கார்தான் சிவரக்கோட்டை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்த நிலையில் தற்போது தப்பிச் சென்றுள்ள மேற்கண்ட இருகைதிகளையும் கைது செய்திட போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர்.கைதி டேவிட்முருகேஷ் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும்,மணிகண்டன் நாடார் கடந்த 2016ம் ஆண்டும் வழிப்பறி,கொலை முயற்சி,கொடுங்காயப்படுத்துதல்,ரௌடித்தனம் செய்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளின் பேரில் கல்யாண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கைதிகள் கடத்தி வந்த காரின் டிரைவர் பகுதிக்கு முன்பக்க கண்ணாடி உடந்திருந்த காரணத்தினால் ஓட்டுவதற்கு சிரமம் ஏற்பட்டதால் அதை சிவரக்கோட்டை கிராமத்தின் காட்டுப்பகுதியில் அவர்கள் நிறுத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த சம்பவங்கள் குறித்தும்,போலீசாரின் தற்போதைய தேடுதல் வேட்டைகள் குறித்து மகாராஷ்டிர மாநில போலீசாருக்கு முறைப்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் கடலோர தென் மாவட்டங்கள் முழுவதிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ராமேஸ்வரம் பகுதியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் நினைவு மண்டபம் திறப்புவிழாவிற்கு பிரதமர்,முதல்வர் மற்றும் ஏராளமானோர் வரவுள்ள நிலையில் மகாராஷ்டிர மாநில சிறையிலிருந்து தப்பிய இரண்டு கைதிகள் திருமங்கலம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து