முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வையற்றவர்களுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

புதன்கிழமை, 26 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பல்வேறு திட்டங்கள் ...

சமுதாயத்தில் ஓர் அங்கமாக மாற்றுத் திறனாளிகளை அங்கீகரித்தும், சமுதாய வளர்ச்சியில் அவர்களை பங்கேற்கச் செய்தும், அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் வகையிலும், தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்விற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு விருதுகள் ...

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, முதல்வரால் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்த சிறந்த சமூகப்பணியாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

5000 பார்வையற்ற ...

கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து எளிதில் வெளியிடங்களுக்கு சென்று வர ஏதுவாக 2016 - 2017-ம் நிதியாண்டிற்கு 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,017 மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒளிரும் மடக்குக் குச்சிகளுக்கு மாற்றாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அதிக தூரத்தில் உள்ள பொருட்களையும் அதிர்வு மூலம் உணர்ந்து தங்கு தடையின்றி பயணிக்க ஏதுவாக 1 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 5000 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, 5 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவீன ஒளிரும்மடக்கு குச்சிகளை வழங்கினார்.

அடையாள அட்டை ....

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கிடும் திட்டத்தின் மூலம் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதோடு, மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பெற்று பயன்பெற முடியும். இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தினை, தமிழ்நாட்டில் துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வி.சரோஜா, அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முகமது நசிமுத்தின், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து