நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

வெள்ளிக்கிழமை, 28 ஜூலை 2017      ஆன்மிகம்
sabarimala temple(N)

சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக இன்றுநடை திறக்கப்படுகிறது.

நிறைபுத்தரிசி பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வேண்டி நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து சாமிக்கு படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும். பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. பிரசாத நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இன்று திறப்பு

இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜையானது நாளை (30-ந் தேதி) காலை 5.30 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலையில் திறக்கப்படுகிறது. பூஜைக்காக கொல்லம் மாவட்டம் அச்சன் கோவிலில் இருந்தும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் இருந்தும் நெற்கதிர் கட்டுகள் ஆண்டாண்டு காலமாக கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அச்சன் கோவிலில் இருந்து நெற்கதிர்களை திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் சேகரித்து ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு வருகிறார்கள்.

ஆவணி மாத பூஜை ...

பாலக்காட்டில் இருந்து ஐயப்பா சேவா சங்கத்தினர் நெற்கதிர்களை எடுத்து வர உள்ளனர். நிறை புத்தரிசி பூஜைக்கு பின் அன்றைய தினம் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக கோவில் நடை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16- ந் தேதி மாலை திறக்கப்பட இருக்கிறது.

சிறப்பு பூஜைகள் ...

திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவிலிலும் நிறை புத்தரி பூஜை 30-ந் தேதி அதிகாலையில் நடத்தப்படுகிறது. இதையொட்டி பத்மதீர்த்தக்கரையில் இருந்து மேளதாளம் முழங்க நெற்கதிர் கட்டுகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கிழக்கு நடையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் இந்த நெற்கதிர் கட்டுகள் பத்மநாபசாமிக்கு படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம் கோவிலின் 4 நடை பகுதிகளில் உள்ள கவுண்ட்டர்களில் வழங்கப்படும்.

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், கரிக்ககம் அம்மன் கோவில் உள்பட கேரளாவில் பல்வேறு கோவில்களிலும் நெற்கதிர்களை படைத்து நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து