இன்று ஓடாநிலையில் நடைபெறவுள்ள தீரன் சின்னமலை விழாவில் 10 அமைச்சர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா   நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் வரவேற்புரையாற்றுகிறார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி, போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில் 10 அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சியினருக்கு காவல்துறை கட்டுபாடு அஞ்சலி செலுத்த வருகை தர உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே குறிப்பிட்ட கட்சியினர் மற்றும் அமைப்பினர் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி அஞ்சலி செலுத்த வரும் வாகனங்களில் வாகன அனுமதி சீட்டு பெற்ற வாகனங்கள் மட்டுமே மணி மண்டபம் வரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

உடன் வரும் வாகனங்கள் வாகனம் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும். பொது இடங்களில் விளம்பர பலகை, தட்டி போர்டு, கொடிகள், சுவர் விளம்பரங்கள் வைக்கவும், மேள தாளங்கள் உபயோகப்படுத்தவும் விழா நடைபெறும் இடங்களிலோ அல்லது சுற்று வட்டார பகுதியிலோ வான வேடிக்கைகளை நடத்தவோ அனுமதி கிடையாது. வடபழனி முதல் ஓடாநிலை மணி மண்டபம் வரை ஒரு வழிப்பாதை ஆகும். அதேபோல ஓடாநிலை வந்த வாகனங்கள் ஜெயராமபுரம், கஸ்தூரிபா கிராமம், கந்தசாமிபாளையம், மோளபாளையம் வழியாக வெளியே செல்ல வேண்டும். இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து