முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விஷயத்தில் ஆதரவளிக்கும் சீனாவுக்கு கடமைப்பட்டுள்ளதாம்: பாக் ராணுவ தளபதி

வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: ‘‘காஷ்மீர் விஷயத்தில் தயக்கம் எதுவுமில்லாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு கடமைப்பட்டுள்ளோம்’’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா  கூறினார்.
சீன ராணுவத்தின் 90-ம் ஆண்டு விழாவை அந்நாட்டு அரசு கொண்டாடியது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள சீன தூதரகத்திலும் இதற்கான கொண்டாட்டம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
காஷ்மீர் பிரச்சினை, அணு விநியோக கூட்டமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தானை உறுப்பினராக்கும் முயற்சி போன்ற முக்கிய விஷயங்களில் தயக்கம் இல்லாமல் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது. அதற்காக சீனாவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இந்தப் பிராந்தியத்தில் சீனாவும் பாகிஸ்தானும் போர் திறன் சார்ந்த முக்கிய நாடுகளாக உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கை, மதிப்பு, புரிதல், ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நட்புறவாக உள்ளன. உண்மையில் இந்த உறவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட சீன ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையில் உள்ள தொழில்ரீதியான கூட்டணி தொடரும். உலகிலேயே மிகப் பெரிய ராணுவ பலம் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. அந்த ராணுவத்துடன் நட்புறவுடன் இணைந்து போர் பயிற்சி உட்பட எல்லா விஷயங்களிலும் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் விஷயத்திலும் நிபந்தனையற்ற ஆதரவை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வருகிறது. எனவே, சீனாவோடு தோளோடு தோள் நிற்போம். இவ்வாறு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து