முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு: சீன ராணுவம்

சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சிக்கிம் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க நல்ல எண்ணத்துடன் அமைதி காத்து வருகிறோம். ஆனால் எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு’’ என்று மீண்டும் சீனா மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியா - சீனா - பூடான் ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் டோக்லாம் எல்லைப் பகுதியில், கடந்த ஜுன் மாதம் 16-ம் தேதி சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களை இந்திய வீரர்கள் அப்புறப்படுத்தினர். அதன்பின் சிக்கிம் எல்லையில் உள்ள அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். பதிலுக்கு சீனாவும் ராணுவத்தை குவித்து போர்ப் பயிற்சியிலும் ஈடுபட்டது.

இதனால் சிக்கிம் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. படைகளை வாபஸ் பெற்றால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சீனா எச்சரித்தது. அதை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. ‘‘பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு இருதரப்பினரும் படைகளை வாபஸ் பெற வேண்டும். அப்போதுதான் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல முடியும்’’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இந்நிலையில்  சீனா பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரென் குவோகியாங் வெளியிட்ட அறிக்கையில்  , ‘‘சிக்கிம் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க சீனா நல்லெண்ணத்துடன் அமைதி காத்து வருகிறது. இந்தியாவை தூதரகம் மூலமாக தெடார்ந்து பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்தோம். சீன ராணுவம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர். ஆனால், எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறாமல் காலம் தாழ்த்தும் தந்திரத்தை இந்தியா கடைப்பிடிக்கிறது. சீனாவின் வலிமையை எந்த நாடும் குறைத்து மதிப்பிட முடியாது. எங்கள் வீரர்கள் நாட்டை பாதுகாக்கும் மன உறுதி உள்ளவர்கள்’’ என்று கூறியுள்ளார்.

டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைத்தால், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி துண்டிக்கப்படும் நிலை உருவாகும். அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். மேலும், பூடான் நிலத்தையும் ஆக்கிரமித்து சீனா சாலை அமைப்பதாக புகார் எழுந்துள்ளது. பூடானுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது.
மேலும் முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா சாலை அமைப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. அதனால், சிக்கிம் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது என்றும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் இருதரப்பும் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து