பொது சுகாதார கல்வித்துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் சுகாதார விழிப்புணர்வு முகாம்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுக்கல்வித்துறை சார்பில் தூய்மை இந்தியா மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட ஸ்ரீ பக்தவச்சலம் மெமோரியல் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

புகைப்படம்

பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதார கல்வித் துறை சார்பாக நோய்த் தடுப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர்.தா.கார்த்திகேயன், அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் மாணவ சமுதாயத்தின் பங்கு, குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று வகைப்பிரித்து அளித்தலின் அவசியம், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்வச்சதா செயலியைபதிவிறக்கம் செய்யும் முறை, அதன் மூலம் குப்பைகள் அகற்றுவது மற்றும் பொது கழிப்பறை சம்மந்தமாக குறைகள் இருப்பின் எவ்வாறு புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டன.


இன்று வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5616 பேர் ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், கல்லூரி வளாகத்தில் மக்கும், மக்காத குப்பைகளின் வகைகள் என்னென்ன என்றும், டெங்கு காய்ச்சலை பரப்ப காரணமாக இருக்கும் ஏடிஸ் ஈஜிப்டி வகை கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்தும் கொசுப்புழுக்களுடன் கண்காட்சியில் வைத்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டன. இம்முகாமில் சுமார் 1000 க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டனர். பின், மாணவிகள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பை என வகைப்பிரித்தல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், கல்லூரி வளாகத்தை ஒட்டிய தெருக்களில் விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவிகள், ஆசிரியப் பெருமக்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் மண்டல அலுவலர் .ஆர்.பாலசுப்ரமணியன், சுகாதார கல்வி அலுவலர் முனைவர். டி.ஜி.சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் பாபு, கல்லூரி முதல்வர்.முனைவர்..ஈஸ்வரி, ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து