அகமது பட்டேல் வெற்றி: தேர்தல் கமி‌ஷன் முடிவு வரவேற்கத்தக்கது: திருநாவுக்கரசர்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      தமிழகம்
thirunavukkarasar 2016 09 20

சென்னை, டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றதையடுத்து தேர்தல் கமி‌ஷன் சரியான முடிவுவை எடுத்துள்ளது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
 
டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி வருமாறு:-

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகமது பட்டேல் பாரதீய ஜனதாவின் பல்வேறு சதியை வென்று வெற்று பெற்றுள்ளார். இதற்காக தமிழக காங்கிரஸ் சார்பிலும் என் சார்பிலும் இனிய வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன். அகமது பட்டேல் காங்கிரசின் மூத்த தலைவர் மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் ஆவார். அவரை எப்படியும் எம்.பி. தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என பாரதீய ஜனதா சதி வேலையில் ஈடுபட்டது.

இதற்காக காங்கிரசில் சில எம்.எல்.ஏ.க்களை உடைத்து, காங்கிரஸ் இருந்து ஒருவரை பிரித்து வேட்பாளராக நிறுத்தியது மட்டுமின்றி நோட்டாவையும் கொண்டு வந்து திணித்து எப்படியாவது அகமது பட்டேலை தோற்கடிக்க மத்திய அரசும், மாநில பா.ஜனதா அரசும் ஜனநாயக விரோதமாக பல சதி வேலைகளில் ஈடுபட்டது. ஜனநாயக விரோதமான இந்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. ஆனாலும் இந்த சதி வேலையை உடைத்தெறிந்து காங்கிரஸ் வேட்பாளரான அகமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு மத்திய மந்திரி அருண்ஜெட்லி உள்பட மூத்த மந்திரிகள் 8 பேர் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கே சென்று தேர்தல் ஆணைய முடிவுகளை திசை திருப்பி மாற்ற முயற்சி செய்தது பாரதீய ஜனதா கட்சியின் மிக மோசமான செயலாகும். ஆனாலும் தேர்தல் கமி‌ஷன் தன் நம்பிக்கைத்தன்மையை காப்பாற்றி கொள்ளும் வகையில், சரியான முடிவு எடுத்தது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. வெற்றி பெற்ற அகமது பட்டேலுக்கும், சோனியா காந்தி, ராகுல் காந்திக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மோடி நிகழ்த்திய எல்லா வித தில்லுமுல்லுகளையும் மீறி காங்கிரஸ் பேரியக்க வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றமைக்கு எனது மகிழ்ச்சியையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் ‘ராமராஜ்யம்’ அமைப்போம் எனக் கூறிக் கொண்டே ‘ராவண ராஜ்யம்’ நடத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதுமட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் பாரதீய ஜனதா ஆட்சி மலரும் எனக் கூறியுள்ள இவர், அதற்காக பல்வேறு மாநிலக் கட்சிகளைப் பலவழிகளில் மிரட்டி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ‘சர்வாதி காரி’யாக மாறி வருகிறார். தொடர்ந்து இவ்வாறு செயல்படும் மோடிக்கு சர்வாதிகாரிகள் ஹிட்லருக்கும், முசோலினிக்கும் முடிவில் ஏற்பட்ட நிலையை நினைவு கூற விரும்புகிறேன். உலகிற்கே வழிகாட்டியாகத் திகழும் இந்தியாவின் ஜனநாயக ஆட்சிமுறை மோடியின் ஆட்சியில் ஆபத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து