இலங்கை மீது வலுவான ராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      தமிழகம்
cm palanisamy(N)

சென்னை : இலங்கை மீது வலுவான ராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

49 மீனவர்கள்...

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-


இந்திய- இலங்கை இடையே உள்ள கடற்பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்த போது, 49 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் 12 மீன் பிடி படகுகளையும் பிடித்து சென்றுள்ளனர். இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். புதுக்கோட்டையை சேர்ந்த 41 மீனவர்கள் படகுகளில் சென்று மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல்களை 2 மீன்பிடி படகுகள் மீது மோதி சேதப்படுத்தி உள்ளனர்.

மீனவர்கள் மீது ...

இதனால் 7 மீனவர்கள் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களை கடற்படையினர் தாக்கி இருக்கிறார்கள். இந்த 7 பேருடன் 41 பேரையும் கடத்தி சென்று இருக்கிறார்கள். அத்துடன் மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 8 பேரையும் கடத்தி சென்றுள்ளனர். அமைதியான முறையில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இது, எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கச்சத்தீவை மீட்பது ...

சமீபத்தில் ராமேசுவரம் வந்திருந்த தங்களுடன் இது சம்பந்தமாக நான் பேசிய நிலையில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இலங்கை கடற்படையினரின் செயல் தேவையற்ற ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்திய அரசும், மாநில அரசும் அமைதி வழியில் முயற்சி எடுத்து வரும் நிலையில் அவர்கள் தரப்பில் நடந்து கொண்ட விதம் சரியானதல்ல. இந்த பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பது மட்டுமே ஒரே வழி என்று எங்கள் தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

கடும் நடவடிக்கை...

இந்த நிலையில் இலங்கை தாக்குதல் நடத்தி எங்கள் மீனவர்களை கைது செய்திருப்பதால் இது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். ராஜதந்திர அடிப்படையில் வலுவான நடவடிக்கையாக இது அமைய வேண்டும். இலங்கையில் சம்பந்தப்பட்ட உயர் அந்தஸ்து நபர்களுடன் நமது வெளியுறவுத்துறை மூலம் தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

64 மீனவர்கள்...

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுடன் சேர்த்து 64 மீனவர்கள் அங்கு சிறையில் உள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு கொண்டு வரவேண்டும். மேலும் அங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ள 125 படகுகளையும் மீட்டு வர வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கடிதத்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின் அவர்கள் அனைவரையும் வரும் 22ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து