முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் பார்லியில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள ஊழல், வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழித்துவிட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். இதன் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டில் 1857-ல் சுதந்திரப் போர் தொடங்கியது. இதற்காக பல்வேறு இயக்கங்கள் தொடங்கப்பட்டன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம்தான். அப்போது மகாத்மா காந்தி ‘செய் அல்லது செத்து மடி’ என்று முழங்கினார்.

இந்த இயக்கம் தொடங்கிய பிறகுதான், சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற இலக்குடன் தலைவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை பெண்கள் உட்பட அனைவரும் ஒன்று கூடி உத்வேகத்துடன் போராடினர். இந்த இயக்கத்தைத் தொடங்கியதற்காக காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல புதிய தலைமுறை தலைவர்கள் உருவாயினர். அதன் பலனாக அடுத்த 5 ஆண்டுகளில் சுதந்திரம் கிடைத்தது.

அதாவது 1942 முதல் 1947 வரையிலான 5 ஆண்டுகள்தான் சுதந்திரம் என்ற இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக அமைந்தது. காலனி ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கினாலும், சுதந்திரம் பெற்றதன் மூலம் இங்கேயே முடிவுக்கு வந்தது. இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வழிகாட்டியாக அமைந்தது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாம் வேறு விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

குறிப்பாக, ஊழல், வறுமை, கல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமானால், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது தீவிரமாக செயல்பட்டது போல மீண்டும் நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். வரும் 2022-ல் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளோம். அதற்குள் இத்தகைய தீமைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

1942 முதல் 1947 வரை சுதந்திரம் பெறுவதற்காக தீவிரமாக போராடியதைப் போல, ஊழல், வறுமை இல்லாத புதிய இந்தியாவை உருவாக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2017 - 2022) நாம் தீவிர முயற்சியில் ஈடுபடுவோம்.

அதேநேரம், மகாத்மா காந்தியின் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கம் இப்போது தேவையில்லை. ‘நம்மால் நிச்சயமாக செய்ய முடியும்’ என்ற முழக்கத்துடன் போராடுவோம். சர்வதேச அளவில் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சாதகமான சூழல் நிலவியது. அதுபோல, இப்போது மீண்டும் சர்வதேச அளவில் நமக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்கும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து