தினகரனின் நியமன அறிவிப்புகள் செல்லாது : தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது - முதல்வர் எடப்பாடி தலைமை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      தமிழகம்
cm chief meet 2017 8 10 0

சென்னை : துணைப் பொதுச் செயலாளர் நியமனம் கட்சி விதிக்கு விரோதமானது. எனவே, தினகரனின் நியமன அறிவிப்புகள் செல்லாது என்றும், தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

ராயப்பேட்டையில் உள்ள அ. தி.மு.க. தலைமை கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். பகல் 12.30 மணி வரை சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பத்திரிகையாளர் மற்றும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.
அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் எம்.பி., அ.தமிழ்மகன் உசேன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.தங்கமணி உட்பட 27 தலைமைக்கழக நிர்வாகிகள் கையெழுத்திட்டிருந்தனர்.


விரும்ப மாட்டார்கள்...

அதில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:-

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் அவரது வாழ்க்கையே அர்ப்பணித்து, வளர்க்கப்பட்டு இன்று இந்திய நாட்டின் 3-வது பேரியக்கமாக உருவெடுத்துள்ள அ. தி.மு.க.வின் 1.50 கோடி தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள். நாம் வணங்கும் ஜெயலலிதா நம்மை அனைவரையும் மீளாத் துயரில் விட்டுவிட்டு 5.12.2016 தேதியில் மண்ணுலகை விட்டு மறைந்ததை இன்றும் ஏற்க இயலாத மன நிலையில் நாம் அனைவரும் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் அவரது ஆன்மா சாந்தி அடைய அவரது நோக்கங்களை, லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்ற ஒன்றுகூடி உறுதிமொழி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற பொன்மொழிக்கேற்ப நாம் ஒன்றுகூடி ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். நமது கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக கழக பணியாற்றிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா இடத்தில் வேறு எவரையும் நமது கழகத் தொண்டர்கள் அமர்த்தி அழகு பார்க்க விரும்ப மாட்டார்கள்.
வழிநடத்தி வருகிறோம்

அவரது மறைவிற்குப் பின்னர் சசிகலாவை பொதுச் செயலாளராக கழக சட்டத்திட்டங்கள்படி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை நியமிக்கப்பட்டாலும், அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அவரால் செயல்படா நிலை ஏற்பட்டுள்ளதாலும் மற்றும் பல்வேறு நபர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாலும் நமது அ.தி.மு.க சட்டத்திட்ட விதி 20 (V) படி நமது அ.தி.மு.க நிரந்தரப் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்று கூடி அம்மாவின் வழிகாட்டுதலின்படி கழகத்தையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறோம்.

தினகரன் பதவி செல்லாது

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 19.12.2011 தேதியில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், 14.2.2017 தேதியில் கழகத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு அவரை 15.2.2017 தேதியில் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. நமது கழகத்தின் சட்டத்திட்ட விதி 30(V)ற்கு விரோதமானது. அவர் தொடர்ந்து 5 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பதவியை வகிக்காத காரணத்தினால் அவரால் கழகத்தின் எப்பொறுப்பையும் கழக சட்டதிட்ட விதியின்படி வகிக்க இயலாது. தினகரன் துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தை, 3.3.2017 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் பதில் கடிதத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர், ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயர் இடம்பெறவில்லை என்று கூறி அவர் கடிதத்தை ஏற்க மறுத்து நிராகரித்து விட்டது. மேலும் அவரை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்த பொதுச் செயலாளரின் நியமனமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.

அறிவிப்புகளும் செல்லாது

இவைகளுக்கு மாறாக தினகரன் தன்னிச்சையாக கடந்த 4.8.2017 தேதியில் நமது கழகத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நமது கழகத்தை அதன் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமை நிர்வாகிகள் ஒன்று கூடி வழி நடத்தி வரும் நிலையில் நமது கழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படுத்த அவரால் வழங்கப்படும் அறிவிப்புகள் அ.தி.மு.க. தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது. அவரது அறிவிப்புகள் மூலம் நியமனம் செய்யப்பட்ட பொறுப்புகள், கழக சட்டத்திட்ட விதிகள்படி செல்லக்கூடியவை அல்ல. கழக தொண்டர்கள் அதனை நிராகரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஒன்று கூடி வழி நடத்துவோம்

எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் உயரிய லட்சியமான ‘‘ஒவ்வொரு கழக தொண்டனுக்கும் வாய்ப்பு’’ ‘‘உழைப்பால் ஒவ்வொருவரும் எல்லா நிலையையும் அடைய வேண்டும்’’ என்பதை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்று கூடி கழகத்தையும் அதன் ஆட்சியையும் வழிநடத்துவோம் என்று உறுதி ஏற்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் கையெழுத்து

தலைமை நிலையச் செயலாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அமைப்பு செயலாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், துணை சபாநாயகரும், தேர்தல் பிரிவுச் செயலாளருமான பொள்ளாச்சி வ. ஜெயராமன், அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான பி.தங்கமணி, அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, விவசாய பிரிவுத் தலைவர் துரை கோவிந்தராஜன், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம.ராசு, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். சின்னசாமி, சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அ. அன்வர்ராஜா எம்.பி., ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, அமைப்பு செயலாளர் ஏ.கே. செல்வராஜ் எம்.பி., மருத்துவ அணி செயலாளரும், மக்களவை குழுத் தலைவருமான டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி., வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ். சேதுராமன், அமைப்பு செயலாளர் எஸ். ராஜூ, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர். கமலக்கண்ணன், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும், மக்களவை குழு துணைத் தலைவருமான ப. குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளரும், மக்களவை குழுக் கொறடாவுமான எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி. அலெக்சாண்டர், விவசாயப் பிரிவுச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பி.கே. வைரமுத்து, அமைப்பு செயலாளர் டாக்டர் கே. கோபால் எம்.பி., அமைப்பு செயலாளரும், அமைச்சருமான எஸ். வளர்மதி, அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் இரா. ராஜேந்திரன், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகிய 27 தலைமை கழக நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கையெழுத்திடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து