'420' என்பது தினகரனுக்குத்தான் பொருந்தும்; நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் முன்பை விட அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெல்வோம் - டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      தமிழகம்
CM Eadpadi interview

சென்னை : நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் முன்பை விட அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், துணை ஜனாதிபதி பதவிஏற்பில் கலந்து கொண்ட பின், பிற்பகலில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தில் நீட் தேர்விலிருந்துவிலக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரது பேட்டி வருமாறு:-


நீட் தேர்வு குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து, தமிழ்நாடு மட்டும் ஏன் இப்படி தொடர்ந்து எல்லா மாநிலங்களிலிருந்தும் விலக்காக இருக்கிறீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எனக்குத் தெரியவில்லை. இப்பொழுது தான் நான் பிரதமரை சந்தித்து வந்திருக்கின்றேன். அது குறித்து முழுவதுமாக தெரிந்த பிறகு தான் பதில்கூறமுடியும்.

தினகரன் 420 என்று சொல்லியிருக்கிறாரே?

420 என்று குறிப்பிட்டது அவருக்குத்தான் பொருந்தும் என்று கருதுகின்றேன். ஏனென்றால் மூன்று மாத நிலையை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். அதற்கு யார் பொருத்தம் என்றால், அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கருதுகின்றேன்.

அணிகள் இணைப்பு பற்றி ?

இன்னும் அதைப்பற்றி எங்கள் பகுதியிலும் சரி, அவர்கள் பகுதியிலும் சரி, பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. இணையும் என்று நம்புகிறோம்.

பிரதமரை சந்தித்து என்ன பேசினீர்கள்?

நீட் தேர்வை பற்றித்தான் நான் பேசியிருக்கிறேன்.

நம்முடைய பாடத்திட்ட அடிப்படையிலே நீட் தேர்வு ஏன் கேட்கக்கூடாது?

நீட் தேர்வு அறிவிக்கப்பட்டு நடைபெற்று விட்டது. ஆகவே, நாங்கள் தொடர்ந்து ஜெயலலிதா இருக்கும் பொழுதே சட்டமன்றத்தில் தமிழகத்தில் நீட்தேர்விற்கு விலக்களிக்க வேண்டும் என்று சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அது இன்றைக்கு நிலுவையிலே இருக்கின்றது. அதனால், பிரதமரை சந்தித்து, அதற்கு வடிவம் கொடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றோம்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?

அவர் ஏற்கனவே எங்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அதிலே நாங்கள் வெற்றி பெற்றோம். பிறகு, சட்டப் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம், அதிலும் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றோம். இப்பொழுதும் கொண்டு வந்தால், நிச்சயமாக அதிக ஓட்டுக்களிலே நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி நிருபர்களிடம் தெரிவித்தார்.

பிரதமருடனான சந்திப்பு பின், ஜனாதபிதி ராம்நாத் கோவிந்துடன் முதல்வர் எடப்பாடி சந்தித்து‌ நீட் தேர்வு தொடர்பாக பேசினார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து