முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் டி.பிளாக் பகுதியில் உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச. நடராஜன் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் சார்பாக ‘தூய்மை பாரத இயக்கம் - திறந்த வெளியில் மலம் கழித்தலில் இருந்து விடுதலை” குறித்த விழிப்புணர்வு பேரணியினைக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக ஊரகப்பகுதிகளில் சுற்றுப்புறத்தினை தூய்மையாகப் பராமரித்திடும் வகையிலும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை உருவாக்கிடும் விதமாகவும்,  கழிப்பறைகள் இல்லாத வீடுகளை கண்டறிந்து தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் கழிப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கழிப்பறைகள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.  அந்த வகையில் 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,35,969 குடும்பங்களில் கழிப்பறை இல்லை என கண்டறியப்பட்டு 2013ம் ஆண்டு முதல் இதுவரை 87,961 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 90,803 கழிப்பறைகளை பிப்ரவரி 2018க்குள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவந்து ‘முழு சுகாதார ராமாநாதபுரம் மாவட்டம்” என்ற நிலையை அடைந்திட ஏதுவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளில் இதுவரை 195 ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக கிராம சபையில் அறிவிக்கப்பட்டுள்ளன. கழிப்பறை கட்டுமானம் செய்ய குடும்பம் ஒன்றுக்கு ரூ.12ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் சார்பாக 09.08.2017 முதல் 15.08.2017 வரை தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பட்டணம்காத்தான் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் இருந்து தூய்மை பாரத இயக்கம் - திறந்த வெளியில் மலம் கழித்தலில் இருந்து விடுதலை குறித்த விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இப்பேரணியானது பட்டணம்காத்தான் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் துவங்கி டி.பிளாக் (பிரதான சாலை) வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.  இப்பேரணியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 இதுதவிர மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் சார்பாக தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு கழிப்பறை கட்டிப் பயன்படுத்துவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடையே உண்டாக்கும் வகையில் மக்களிடையே துண்டுப் பிரசுரம் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்துதல், சாலையோரங்களில் விளம்பர பலகைகள் அமைத்தல், விளம்பர ரதம் மற்றும் ஒலிப்பெருக்கி மூலம் தகவல் பரப்புதல், மகளிர் குழு பெண்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ராஜா உள்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து