முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் உறுப்புத்தானத்தில் தொடர்ந்து 2-வது முறையாக தமிழகம் முதலிடம் - மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கவர்னர் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 2-வது முறையாக முதலிடம் பெற்று சாதனை படைத்து வரும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறைக்கு கவர்னர் வித்யாசாகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் வித்தியாசாகர் ராவ், உடல் உறுப்பு தானம் செய்த குடும்ப உறுப்பினர்களையும், மருத்துவர்களையும் கௌரவித்தார். அப்போது பேசிய கவர்னர் வித்யாசாகர் ராவ் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதினை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதற்காக தமிழகத்தை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முதலாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு அவர்களே தலைவராக இருந்து அர்ப்பணிப்புடன் வழிநடத்தினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மூலம் இலவசமாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இச்சிகிச்சைக்காக ரூ.35 லட்சம் வரை உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்கிறது. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகமான தொகையாகும்.

பிரதமர் மோடி தன்னுடைய ‘மனதின் குரல்’ பதிப்பில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருப்பதால் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக, சிறந்து விளங்குவதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ‘ஆங்கில மருத்துவ பத்திரிக்கை’ தமிழகத்தின் உடல் உறுப்பு தான செயல்பாடுகளை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தக்கதாக உள்ளது என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும், மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் செயற்கை சுவாசக் கருவி மூலமாக இயங்குவதால், இதயத்தின் செயல்பாடு திடீரென நின்று விட்டால் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் தானாகவே நின்றுவிடும். எனவே மூளைச்சாவு அடைந்தவரின் உறவினர்கள் ஒருவிநாடி கூடத் தாமதிக்காமல் தானம் செய்ய வேண்டும்.

இதன்படி மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், இதயவால்வு, இரத்த குழாய், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் 7 பேருக்கு வாழ்வளிக்க முடியும். மருத்துவ துறையை சார்ந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் குழுவினர்கள்,ஆலோசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல்துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதம் 13-ம் முதல் நவம்பர் மாதம் 27-ம் தேதி வரை உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திட தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையான தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக தொடர்ந்து விளங்கும் என்பதில்சிறிதளவும் சந்தேகமில்லை. உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு முன்வர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறைகூவல் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய அரசின் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத், குளோபல் மருத்துவமனை இயக்குநர் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரீலா மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து