முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு தீவிர ஆலோசனை

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டு இறுதியிலேயே தேர்தலை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 2019-ல் பாராளுமன்றத்  தேர்தலுடன் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஷா மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

முன்கூட்டியே தேர்தல்
சில மாதங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை இருக்கிறது. ஆகையால் 2018-ம் ஆண்டு இறுதியிலேயே சட்டசபை தேர்தல்களுடன் பாராளுமன்ற  தேர்தலையும் நடத்தலாமா என்பது குறித்து மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் பரிசீலித்து வருகிறதாம்.

இது தொடர்பாக 2019-ல் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் ஆளும் கட்சிகளான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்குதேசம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகியவற்றின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபைகளின் பதவி காலம் ஓராண்டு இருந்த நிலையிலேயே கூட தேர்தல்கள் முன்கூட்டியே நடத்தப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன.

2018 இறுதியில் தேர்தல்?
ஆகையால் அடுத்த ஆண்டு இறுதியில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு சாத்தியம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதற்காக அரசியல் சாசனத்தில் எந்த திருத்தமும் கொண்டுவரத் தேவையில்லை எனவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து