முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் பிளவு உறுதியானது: சரத்யாதவை ஆதரிக்கும் 21 தலைவர்கள் சஸ்பெண்ட்

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

பீகார் :  ஐக்கிய ஜனதா தளம் இரண்டாக பிளவுபடுவது உறுதியாகிவிட்டது. சரத்யாதவுக்கு ஆதரவான 21 தலைவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில்  நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் அரசுக்கு லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆதரவை வாபஸ் பெற்றது. இதனையொட்டி பாரதிய ஜனதா ஆதரவுடன் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து அரசு அமைத்துள்ளதற்கு பீகார் ஐக்கிய ஜனதாதளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கட்சியின் முக்கிய தலைவரான சரத்யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையொட்டி கட்சியின் ராஜ்யசபை தலைவர் பதவியிலிருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டார். சரத்யாதவ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை திரட்டி வந்தார். ஐக்கிய ஜனதாதளத்தில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க அவர் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து சரத்யாதவ் ஆதரவு தலைவர்கள் 21 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மாநில கட்சி தலைவர் பசிஷ்தா நாராயண்சிங் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரமாய்ராம், முன்னாள் எம்.பி. ஷியோகர் அர்ஜூன் ராய், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் சின்ஹா, முன்னாள் எம்.எல்.சி. விஜய்சர்மா உள்பட 21 தலைவர்கள் கட்சியிலிந்து மாநில தலைவர் பசிஷ்தா நாராயண்சிங் நீக்கியுள்ளதாக மாநில பொதுச்செயலாளர் அனில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

மேலும் மாவட்ட அளவிலான தலைவர்கள் சிலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டுள்ள தலைவர்களில் ரமாய்ராம், ஷியோகர் சின்ஹா ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் சரத்யாதவ் நடத்திய யாத்திரையில் கலந்து கொண்டவர்கள்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத்யாதவ், பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 கோடி மக்கள் வாக்களித்து நிதீஷ்குமார் அரசை ஆட்சியில் அமர்த்தினார்கள். அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததன் மூலம் நிதீஷ்குமார் துரோகம் இழைத்து விட்டார் என்றார்.

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. அலி அன்வார் கலந்து கொண்டார். இதற்காக கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

சரத்யாதவ் சுற்றுப்பயணத்திற்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தபோதிலும் இந்த 21 தலைவர்களும் மாநில நிர்வாகிகளும் சரத்யாதவுடன் சேர்ந்து மக்கள் ஆதரவை திரட்டினர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள முக்கிய தலைவர் ராம்ராய் கடந்த 2010-ம் ஆண்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் அரசில் அமைச்சராக இருந்தார். பின்னர் ஐக்கிய ஜனதாதளத்தில் சேர்ந்து நிதீஷ்குமார் அரசில் அமைச்சரானார்.

இவர்தான் லல்லுவின் மகன் தெஜ்ஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக 4 நாட்கள் கெடு விதித்தார். தற்போது சரத்யாதவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து