முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார், மேற்குவங்கம், அசாமில் வெள்ளப்பெருக்கு: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா :  பீகார்,மேற்குவங்கம்,அசாம், மற்றும் அருணாசலப்பிரதேசம் உள்பட பல வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் இடைவிடாத மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பீகார்

பீகார் மற்றும் அந்த மாநிலத்திற்கு மேலே உள்ள அண்டை நாடான நேபாளத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பீகார் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் இருந்து வரும் வெள்ளமும் சேர்ந்துள்ளதால் பீகார் மாநிலம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பீகாரில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் நிதீஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில் மாநிலத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சில மாவட்டங்களில் பள்ளமான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மத்திய அரசானது ராணுவத்தை அனுப்பியுள்ளது. ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராணுவத்தினர் வர உள்ளனர் என்று முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்தார்.

மேற்குவங்கம்

மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வாயிலாக அமைந்திருக்கும் அசாம் மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் ரயில்தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனையொட்டி நாட்டின் இதர பகுதிகளில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள கதிஹர் மற்றும் மால்டா நகருக்கு செல்லும் ரயில்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று வடகிழக்கு பிராந்திய ரயில்போக்குவரத்து மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி பிரணாவ் ஜோதி சர்மா தெரிவித்தார். 11 ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் பல ரயில்கள் வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன என்றும் சர்மா தெரிவித்தார். அலிபுர்துவாவ்,கதிஹர் ஆகிய பகுதிகளில் உள்ள நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்பு பலத்த மழையால் மேற்குவங்கத்தின் தென்பகுதி கடுமையாக பாதித்தது. தற்போது மாநிலத்தின் வடபகுதியானது பலத்த மழையால் கடுமையாக பாதித்து வருகிறது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

அருணாசலப்பிரதேசம்

நாட்டின் வடக்கே சீனா எல்லையையொட்டியுள்ள அருணாசலப்பிரதேச மாநிலத்திலும் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாது பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. மாநிலத்தின் தொலைதூரத்தில் உள்ள ஆஞ்சாய் மாவட்டம் மாநிலத்தின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரான லோகித்தில் இருந்து ஆஞ்சாய் மாவட்டத்திற்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதோடு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை பணியாளர்கள் நிலச்சரிவை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் மேலும் மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் சீர்படுத்தும் பணியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து