முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பணம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: பிரதமர் மோடி சுதந்திர தின உறுதி

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  ஊழலுக்கும், கறுப்பு பணத்திற்கும் எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் சொர்க்க பூமியாக மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின்போது உறுதி பூண்டார்.

நாட்டின் 71-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். ஆனால் இதற்கு முன்பு சுதந்திர தினத்தன்று உரையாற்றிய நேரத்தை விட இந்த சுதந்திர தினத்தில் குறைந்த நேரமே மோடி உரையாற்றினார்.

சுமார் 55 நிமிடமே அவர் உரையாற்றினார். உரையின்போது பிரதமர் மோடி வழக்கமான ஆடையையே அணிந்திருந்தார். அரைக்கை குர்தா சட்டையும் சுரிதார் பைஜாமாவும் ராஜஸ்தான் மாநில தலைப்பாகையையும் அணிந்திருந்தார். மோடியின் உரையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். ஏராளமான பள்ளிக் குழந்தைகள் கடவுள் கிருஷ்ணர் மாதிரி வேடம் போட்டு வந்திருந்தனர்.  அவரது உரை தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பப்பட்டது. அதை கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

பிரதமர் மோடி தனது உரையின்போது நாட்டில் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கெதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றார். உயர்மதிப்புள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாட்டில் கறுப்புப்பணம் ரூ.3 லட்சம் கோடி வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதில் ரூ. 1 கோடியே 75 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 18 லட்சம் பேர் முறைகேடாக சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மத்திய அரசின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் சொர்க்க பூமியாக மாற்றுவோம். காஷ்மீர் பிரச்சினைக்கு அத்துமீறல்களும், புல்லட் குண்டுகளும் தீர்வுகாண உதவாது. காஷ்மீர் மக்களை அரவணைத்து போவது மூலம்தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்காக தீவிரவாதம் விஷயத்தில் சமாதானத்திற்கே இடமில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கு உதாரணமாக சர்ஜிக்கல் அட்டாக்கை கூறலாம்.  காஷ்மீர் பிரிவினைவாதிகள் பல்வேறு வழிகளில் யுக்திகளை கையாண்டு மாநிலத்தில் வன்முறையை தூண்டி விடுகிறார்கள். இருந்தபோதிலும் காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் சொர்க்க பூமியாக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் மோடி கூறினார்.

பிரதமர் மோடி தனது உரையின்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிக அளவில் குறிப்பிட்டார். உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமுல்படுத்தப்பட்டது, கறுப்புப்பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக மோடி விளக்கமாக பேசினார்.

நாட்டையும் ஏழை மக்களிடத்திலும் கொள்ளை அடித்தவர்கள் இன்று அவர்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. கொள்ளையர்கள், ஊழல்வாதிகள், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கெதிரான நடவடிக்கை தொடரும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் துண்டிக்கப்பட்டதால் குழந்தைகள் பலியானது பற்றியும் கவலையுடன் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தார்களுக்கு நாடே பரிதாபடுகிறது. அவர்களுக்கு ஆதரவாக தேசம் இருக்கும். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் செக்போஸ்ட்கள் அகற்றப்பட்டுள்ளன.

இதனால் பொருட்கள் வேகமாக சென்றடைகின்றன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமுல்படுத்தியதால் 12-க்கும் மேற்பட்ட மத்திய மாநில வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வர்த்தக திறமையையும் அதிகரித்துள்ளது. சரக்கு லாரிகள் போக்குவரத்து சுமூகமாகவும் வேகமாகவும் நடைபெறுகிறது. போக்குவரத்தை கையாளும் திறமை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து