முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறையினருக்கான சொந்த இல்லம் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, காவல்துறையினருக்கான 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்தை மாநிலவிரிவாக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் .

தமிழக காவல்துறையினருக்கான ஜனாதிபதி மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவால் துவக்கி ...

40 வயது நிரம்பிய காவல் பணியாளர்களுக்கஆண்டிற்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லா முழு உடல் மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டு வருகிறது. சீருடைப் பணியாளர்களுக்கெ ஜெயலலிதாவால் "உங்கள் சொந்த இல்லம்" என்ற திட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் முதற்கட்டமாக துவக்கி வைக்கப்பட்டது. இங்கு 47.6 ஏக்கர் நிலப்பரப்பில், அனைத்து வசதிகளுடன் 2,673 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் ஒரு காவல் அங்காடி...

கடந்த ஆறு ஆண்டுகளில் 14 ஆயிரத்து 977 காவல் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 6 ஆயிரத்து 257 காவல்குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. சீருடை பணியாளர்களின் சிரமம் அறிந்து, அவர்களது நலனுக்கென 2011-ம் வருடம் முதன் முதலாக மூன்று இடங்களில்தமிழ்நாடு காவல் அங்காடி துவங்கப்பட்டது. தற்போது, 7 கோடி ரூபாய் செலவில் 47 இடங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு காவல் அங்காடிகளால் காவல்துறை, சிறைத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் என ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 880 பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்த பயனை மேலும் விரிவாக்கும் வண்ணம், மேலும் ஒரு தமிழ்நாடு காவல் அங்காடியை கொண்டித்தோப்பிலும் நிறுவ அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகள்

நாட்டு நலனுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையை வலுப்படுத்தும் வகையில் நவீன ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை வழங்குதல், ரோந்துப் பணியை அதிகப்படுத்துதல் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல், சீருடைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இடர்ப் படி மற்றும் உணவுப் படியை உயர்த்தி வழங்குதல், காவல் உணவகங்கள், துயில் கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல், காவல் மருத்துவ மனையை மேம்படுத்துதல், காலத்தே பதவி உயர்வு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.

மக்கள் பணி ஆற்றுங்கள்

நீங்கள் கடமையில் கண்ணாக இருந்து சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதால்தான் மக்கள் வீட்டிற்குள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும், நிம்மதியாக வாழ முடிகிறது. சுதந்திரமாக தங்களுடைய அன்றாட பணிகளைச் செய்ய முடிகிறது "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற புனித மொழியையே தாரகமந்திரமாகக் கொண்டு நீங்கள் மக்கள் பணி ஆற்றுங்கள். மக்கள்தான் இந்த நாட்டின் எஜமானர்கள். அவர்களுக்கு 24 மணி நேரமும் நீங்கள் பாதுகாப்பு அளியுங்கள். அந்த பாதுகாப்புதான் தமிழ்நாட்டை இன்று பல துறைகளிலும் முன்னேற்றி இருக்கிறது. காவல் துறைப் பணி என்பது ஒரு மகத்தான பணி. சமுதாயத்தில், அநீதி இழைக்கப்பட்ட மக்கள் நியாயம் கோரி, காவல் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை மனித நேயத்தோடு அணுகி அன்பாகப் பேசி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைப் பார்த்து அதற்கு காரணமான நீங்களும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். சட்டத்தின் மீதும் இந்த அரசின் மீதும் மக்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்படுகிறது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அல்லும் பகலும் அயராது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினர் தங்கள் கடமையினை மேலும் சிறப்புற ஆற்றும் வகையில் அவர்களுக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

பணியில் மைல்கல்லாக ...

தமிழ்நாடு அரசு,  சீருடை பணியாளர்களின் நலனில், அக்கறை காட்டுவதில் எப்போதும் முன்னோடியாக இருந்து வந்துள்ளது. அது தொடரும் என்பதையும் இந்த இனிய நாளில் தெரிவித்துக் கொள்கிறேன். பதக்கம் பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதக்கமானது அவர்களது பணியில் மைல்கல்லாக இருப்பதோடு; பதக்கம் ஏந்தும், பொன்னான தருணமானது வாழ்நாளில் நெஞ்சை விட்டு அகலாது என்பதில் கடுகளவும் ஐயமில்லை. பணியில் அர்ப்பணிப்பு, தொடர் சேவை, பொதுமக்களின் பாதுகாப்பு எனசீருடைப் பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிய, முதுகெலும்பாய் செயல்படும் அவர்களின் குடும்பத்தினர்களும் இங்கு குழுமியுள்ளனர். உங்கள் துணையின்றி, தியாகமின்றி, அவர்களால் சாதனைகள் நிகழ்த்தியிருக்க இயலாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில், பங்கேற்ற அனைவரையும் டிஜிபி ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து